Friday, February 1, 2008

முஹர்ரம் 10ம் நாள் மகிழ்ச்சியா..? துயரமா...?

இஸ்லாமிய வரலாற்றில் நேர் எதிரான இரு சம்பவங்கள் ஒரே நாளில் நடந்துள்ளது நமது கவனத்திற்குரியது.முஸ்லிம்களில் உள்ள ஷியா பிரிவினர் முஹர்ரம் மாதம் 10ம் நாள் மிகத் துக்ககரமான நாளாக ஆக்கிக்கொண்டு, அன்றைய தினம் தம்மைத்தாமே வருந்திக்கொள்ளக்கூடிய மிக மோசமான செயலில் இறங்குவதைக் காண்கிறோம். இதற்குக் காரணம், இதே நாளில்தான் நபி(ஸல்) அவர்களின் பேரரான ஹுசைன்(ரலி) அவர்கள் கர்பலாவில் நடந்த போரில் ஷஹீதாக்கப்படுகிறார்கள். அது மிக சோகமான ஒரு சம்பவம்தான். இந்நிகழ்ச்சி நடந்த இதே நாளில்தான் இதைவிட முக்கியமான ஒரு சம்பவம் நடக்கிறது. ஃபிர்அவ்ன் என்ற கொடியவனுக்கு எதிராக நபி மூஸா(அலை) அவர்கள் செய்த பிரச்சாரம் ஒரு முடிவுக்கு வந்து அவனிடம் அடிமைப்பட்டுக் கிடந்த பனு இஸ்ரவேலர்களைக் கூட்டிக் கொண்டு எகிப்தை விட்டு வெளியேறுகிறார்கள். விபரம் அறிந்த ஃபிர்அவ்ன் தம் படையுடன் பின்தொடர்ந்து மூஸா(அலை) அவர்களை முற்றுகையிடுகிறான். அந்தச் சந்தர்ப்த்தில் உலகிலேயே மிகப் பெரிய அற்புதம் ஒன்று நிகழ்கிறது. கடல் இரண்டாகப் பிளந்து இரண்டு மலைகள் போல் எழுந்து நின்று விடுகின்றது. அந்த வழியே மூஸா(அலை) அவர்களுக்கு வழிவிட்ட அந்தக் கடல், ஃபிர்அவ்னும் அவனுடைய சேனைகளும் உள்ளே இறங்கியதும் அவர்களைச் சுருட்டி விழுங்கி விடுகிறது. இவை அனைத்தும் இறைவனின் ஏற்பாட்டின்படி நடக்கின்றன.இந்த நாளைப் புகழந்து நன்றி செலுத்தும்விதமாக நபி(ஸல்) அவர்கள் நோன்பு வைத்து பிறரையும் நோன்பு நோற்கச் சொன்ன விவரம் புகாரி, முஸ்லிம், திர்மிதி, அபூதாவூத், நஸயி ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது. ஒரே நாளில் இந்த இரு நிகழ்ச்சிகளை எந்த அடிப்படையில் தீர்மானிப்பது?
இந்த இரண்டு சம்பவங்களில் அன்றைய நிகழ்வையும் இன்றைய நிகழ்ச்சிகளையும் அலசுகின்றது கட்டுரை.
முஹர்ரம் மாதம் பிறந்துவிட்டது என்றாலே பல்வேறு அனர்த்தங்கள் முஸ்லிம் சமுதாயத்தில் உள்ள மூடர்கள் பலரால் அரங்கேற்றப்படுவதை பார்க்கின்றோம். ரதம் போன்று ஒற்றை ஜரிகைகளாலும் வர்ணங்களாலும் அலங்கரித்து இறுதியில் அதை நதிகளில் போட்டு அழிப்பது இது போன்ற நிகழ்வுகளை "பஞ்சா" என்ற பெயரில் முஸ்லிம்களில் ஷியாக் கொள்கைக்காரர்கள் அனைத்து மாநிலங்களிலும் முழுவதும் செய்து வருகின்றனர்.முஹர்ரம் மாதம் 10 ஆம் நாளை கோலாகலமாகக் கொண்டாடுவது ஷியாக்களின் வழக்கம். முஹர்ரம் பண்டிகை என்னும் பெயரில் ஷியா முஸ்லிம்கள் இப் பண்டிகையை வெகு விமரிசையாகக் கொண்டாடுகின்றனர்;.அன்றைய தினம் சில மூடர்கள் பக்திப் பரவசத்துடன் யாஅலி. யாஹுஸைன் எனன்ற கோஷத்துடன் தீயில் நடப்பதும், புலி வேஷம் போட்டு ஆடுவதும், என்று இன்னும் பல்வேறு அநாச்சாரங்களையும் அரங்கேற்றுகின்றனர்.பஞ்சா என்பதற்கு பாரசீக மொழியில் ஐந்து என்று பொருள். நபி(ஸல்), அலி (ரலி), பாத்திமா (ரலி), ஹஸன்(ரலி), ஹூஸைன்(ரலி), ஆகிய ஐந்து பேருக்கும் தெய்வீகத் தன்மை இருப்பதாக நம்புவது ஷியாக்களின் கொள்கை. இதன் அடையாளமாகத் தான் பஞ்சா எடுக்கும் மாபாதகச் செயலை இந்த பஞ்சமா பாதகர்கள் செய்கிறார்கள்.மும்பை, குஜராத், உத்திரப்பிரதேசம் மற்றும் தமிழகத்தில் மேலப்பாளையம், சென்னை, கோயம்புத்தூர் மற்றும் ஷியாக்கள் வாழக்கூடிய பகுதிகளில் வெகு விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது. முஹர்ரம் பண்டிகை என்று அழைக்கப்படும் இப்பண்டிகையில்(?) ஹுஸைன் (ரலி) அவர்கள் கர்பலா போர்க்களத்தில் இறந்ததற்கு துக்கம் அனுஷ்டிக்கும் விதமாக இப்பண்டிகை(?) கொண்டாடப்பட்டு வருகிறது. முஹர்ரத்தின் முதல் பத்து நாட்களில் நடக்கும் அனாச்சாரங்கள் ரொம்ப அதிகம். முஹர்ரம் பண்டிகையில் தீமிதித்தல், பூக்குளித்தல், உடல் முழுவதும் சந்தனம் பூசி பிச்சை எடுத்து காணிக்கை செலுத்துதல், ரதம் அமைத்து அதனுள் பஞ்சா(கைவிரல்கள்) செய்து அதனை ஊர்வலமாக எடுத்துச் சென்று நதிக்கரையில் கரைக்கின்றனர். இது இந்துக்களின் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை முழுக்க முழுக்கத் தழுவியிருக்கிறது.
முஹர்ரத்தின் முதல் பத்து நாட்களில் இறைவன் ஹலாலாக்கிய மீன், கறி போன்றவற்றை உண்ணாமல் தவிர்க்கின்றனர். இதற்காக ஒரு சிறுவனையோ அல்லது வாலிபனையோ பிரத்யேகமாக விரதம் இருக்கச் செய்து பத்தாம் நாள் அலங்கரித்த குதிரையில் ஏற்றி ஊர்வலம் செல்வர். இந்த சிறுவனையும் அவனை ஏற்றி வரும் குதிரையையும் புனிதமாகக் கருதி கண்ணியமாக்குகின்றனர். அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் ஐந்து விரல்கள் கொண்ட கை ஒன்று வைக்கப்படும்.
1) முஹம்மது (ஸல்) அவர்கள்,2) அவர்களின் திருமகளார் பாத்திமா (ரலி),3) அலி (ரலி),4) ஹஸன் (ரலி),5) ஹுஸைன் (ரலி)என்று ஐந்து பேரைக் குறிப்பிடுவதே இந்த பஞ்சா எனும் கையாகும். உருது மற்றும் ஹிந்தியில் பாஞ்ச் என்றால் ஐந்து என்று எல்லோரும் அறிவோம். இதை அடிப்படையாகக் கொண்டே பஞ்சா என்ற பெயர் வந்தது.
இந்த இஸ்லாத்தைத் தகர்க்கும் அனாச்சாரங்களை கண்டிக்க வேண்டிய சில மார்க்க அறிஞர்கள், மௌலவிகள் கூட இந்த முஹர்ரம் மாதத்தில் ஆஷுரா நோன்பு என்ற தலைப்பில் ஹுஸைன் (ரலி)யின் கர்பலா போர்க்களத்தையும், சோக வரலாற்றையும் பேசி மக்களிடம் பாராட்டுகள் பெறுகிறார். நபி (ஸல்) அவர்கள் இறந்த பிறகு ஒன்றன் பின் ஒன்றாக நான்கு கலீஃபாக்கள் ஆட்சி நடத்தினார்கள் அவர்கள் யாரும் நபி (ஸல்) அவர்களின் இறந்த தினத்தை துக்க தினமாக அனுஷ்டிக்கவில்லை எனும் போது அவர்களது பேரர் என்ற காரணத்தினால் அவரை கடவுள் அந்தஸ்திற்கு உயர்த்துவது வரம்பு மீறிய செயலாகும். குறிப்பாக இப் பஞ்சா ஊர்வலத்தில் மாரடித்தல் என்ற நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதாவது யா அலீ!, யா ஹுஸைன்! என்று அவர்கள் இறந்த தினத்தில் மார்பில் அடித்துக்கொண்டு ஒப்பாரி வைப்பது பக்தி எனும் பெயரில் தன் உடம்பில் காயங்களை ஏற்படுத்திக் கொள்வது போன்றவற்றை முஸ்லிம்கள் செய்கிறார்கள். மஹாராஷ்டிரா, உத்திரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் இதுபோன்ற ஊர்வலங்களில் வன்முறை ஏற்பட்டு அரசாங்கம் இந்த பஞ்சா ஊர்வலத்தைத் தடை செய்துள்ளது. இதுபோன்ற செயல்களால் மதக்கலவரங்கள் ஏற்படுகின்றன

ஷியா பிரிவினர் செய்யும் இந்தக் காரியங்களில் எதுவொன்றும் இஸ்லாத்தை சார்ந்ததல்ல. போட்டோக்களில் காணப்படும் இந்த இரத்தக் காணிக்கை மடமையின் உச்சக்கட்டமாகும். மார்க்கம் பற்றிய சாதாரண அறிவுள்ளவர்களுக்கு கூட இந்த கொடுமை எல்லைக் கடந்த அறியாமை என்பது தெரியும். இந்தக் காரியங்களில் ஈடுபடுபவர்கள், இந்தக் காரியத்தை செய்யும் படி தூண்டுபவர்கள் படிப்பறிவற்ற, சிந்தனையற்ற, இஸ்லாமிய தெளிவற்ற, வரலாற்று ஆய்வற்ற மிகக் கீழான அடையாளங்களாவார்கள்.
முஹர்ரம் மாதத்தின் சிறப்பு - சிறப்பிப்பது எப்படி?
“முஹர்ரம்”இஸ்லாமிய ஆண்டின் முதல் மாதமாகும் முஹர்ரம்.முற்காலம் தொட்டு அரபிகள் இம்மாதத்தைப் புனித மாதங்களில் ஒன்றாகக் கொண்டிருந்தனர். முஹர்ரம் என்னும் அரபிச் சொல்லிற்கு “விலக்கப்பட்டது” என்று பொருள்.“சொற் பொருள்”முஹர்ரம், ஹராம்,ஹரம், ஹுரும், தஹ்ரீம் இஹ்ராம் என்ற சொற்கள் ஒரே வேர் சொல்லிலிருந்து பிறந்த சொற்களாகும். பாவங்கள் அல்லது செய்யக்கூடாதவைகளை செய்வதை விட்டும் தடுக்கப்படுவதால் விலக்கப்பட்டது, தடுக்கப்பட்டது,என்றும் விலக்கப்பட்டதை செய்வதைவிட்டும் தடுக்கப்படுவதால் அச்செயல் புனிதமானது என்றும், தடுக்கப்படும் இடம் புனிதமான இடம் என்றும் பொருள் கொள்ளப்படுகிறது.
“புனித மாதங்கள்- அஷ்ஹுருல் ஹுரும்”வானங்களையும், பூமியையும் படைத்த நாள் முதல் அல்லாஹ்வின் பதிவேட்டில் உள்ளபடி மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டாகும். அவற்றுள் நான்கு மாதங்கள் புனிதமானவை ஆகும். ( அல்-குர்ஆன் 9:36) எனத் திருமறை கூறுகிறது. அவை துல்கஃதா, துல்ஹஜ், முஹர்ரம், ரஜப் ஆகிய மாதங்களாகும்.
அல்லாஹ் புனிதமாக்கிய மாதங்களில் ஒன்று முஹர்ரம் மாதமாகும். அதனை நபி(ஸல்) அவர்கள் நமக்கு அறிவித்துள்ளார்கள். அல்லாஹ் புனிதப்படுத்தியதைப் பேணுவது நம் கடமையாகும். மேலும் அல்லாஹ் கூறுகின்றான் ''அதில் உங்களுக்கு நீங்களே தீங்கிழைத்துக் கொள்ளாதீர்கள் '' (9:36) புனிதம் மிக்க மஸ்ஜிதுல் ஹராமில் குற்றமிழைப்பது எவ்வளவு குற்றமோ அது போன்றே புனிதம் மிக்க மாதங்களில் தவறிழைப்பதும் பெரும் குற்றமாகும். எனவே மற்ற மாதங்களைக் காட்டிலும் அதிகமாகப் புனிதம் மிக்க மாதங்களைப் பேணுதல் அவசியம் ஆகும்.
''நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வின் சின்னங்களையோ புனிதம் மிக்க மாதங்களையோ (நீங்கள் தீங்கிழைக்கக) ஆகுமானதாக்கிக் கொள்ளாதீர்கள் '' (5:2)
அவர்கள் அறிவிக்கின்றார்கள், '' ரமளானுக்குப் பின் நோற்கும் நோன்புகளில் மிகவும் சிறப்பான நோன்பு அல்லாஹ்வின் மாதமான முஹர்ரம் மாதத்தின் நோன்பாகும். கடமையான தொழுகைக்குப் பின் மிகச் சிறப்பான தொழுகை இரவுத் தொழுகையாகும் '' ( முஸ்லிம், அஹ்மத்)
யூதர்கள் இந்த பத்தாம் நாளில் நோன்பு நோற்கும் வழக்க முடையவர்களாக இருந்தனர். நபி(ஸல்) அவர்கள் மக்காவைத் துறந்து மதீனா வந்தபோது இப்பழக்த்தைக் கண்டதும் அதற்குரிய காரணத்தை அவர்களிடம் கேட்டனர். அதற்கு “நானே இறைவன்” எனக் கூறிய பிர்அவ்னையும் அவனுடைய படையினரையும் இறைவன் செங்கடலில் மூழ்கடித்ததும் நபி மூஸா (அலை) அவர்களையும் அவர்களின் மக்களையும் காத்தருளியதும் அந்நாளில்தான் என்றும் அந்த நன்றியை நினைவுகூர மூஸா(அலை) அவர்கள் அந்நாளில் நோன்பு நோற்றனர் என்றும் அதனையே தாங்களும் பின்பற்றுவதாகவும் கூறினர். அதைக்கேட்ட முஹம்மத் (ஸல்), ”அவ்விதமாயின் நானும் என் மக்களும் தாம் உங்களையும்விட மூஸா(அலை) அவர்களுக்கு மிகவும் நெருக்கமானவர்கள்” என்று கூறி அது முதல் தாங்களும் நோற்று தம் மக்களையும் அவ்வாறே நோன்பு நோற்குமாறும் பணித்தனர்.(புகாரி, முஸ்லிம், அஹ்மத்)
ஆஷ§ரா தினத்தை யூதர்கள் கண்ணியப்படுத்தி நோன்பு நோற்கின்றார்கள் என்று நபி (ஸல்) அவர்களிடம் சில நபித்தோழர்கள் கூறியபோது , அடுத்த ஆண்டு நான் உயிரோடிருந்தால் (யூதர்களுக்கு மாற்றமாக) ஒன்பதாம் நாளும் நோன்பு நோற்பேன் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆனால் மறுவருடம் இந்த தினத்திற்கு முன்பே நபி (ஸல்) அவர்கள் மரணமடைந்து விட்டார்கள். (முஸ்லிம்)அபூகதாதா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: '' நபி(ஸல்) அவர்களிடம் ஆஷ§ரா நோன்பு பற்றி வினவப்பட்டது. அதற்கு அவர்கள், '' கடந்த ஒரு வருட பாவங்களுக்கு அது பரிகாரமாகும்'' என்று கூறினார்கள். (முஸ்லிம்)
ஹுஸைன்(ரலி) அவர்களை விட சிறந்தவர் இறைத்தூதர் மூஸா(அலை) அவர்கள். சிறப்பு அடிப்படையில் பார்ப்பதாக இருந்தாலும் ஹுசைன் அவர்களின் சம்பவத்தை விட மதிப்பு மிக்க மூஸா அவர்களை முன்னிருத்தி அவர்களை பாதுகாத்ததற்காக இறைவனுக்கு நன்றி செலுத்தி நோன்பிருப்பதே சிறந்ததாகும்.மூஸா என்ற இறைத்தூதர் மிகப் பெரும் அதிசயத்தால் காப்பாற்றப்பட்ட மகிழ்ச்சியான சம்பவமும், முஹம்மத்(ஸல்) அவர்களின் பேரப்பிள்ளை 'கர்பலா'வில் கொல்லப்பட்ட துக்க சம்பவமும் பல நூற்றாண்டு வித்தியாசத்தில் ஒரே நாளில் நடக்கின்றது.துயரமான சம்பவம் நடந்ததால் அந்த நாளை துக்க நாளாக முடிவு செய்யலாமா..?நாளுக்குச் சக்தி இருந்து அன்றைய தினம் நல்ல நாளாக இருந்தால் ஹுசைன்(ரலி) அவர்கள் வெற்றி பெற்றிருக்க வேண்டும். அந்த நாள் கெட்ட நாளாக இருந்தால் மூஸா(அலை) அவர்கள் தோல்வி அடைந்திருக்க வேண்டும். இது ஒன்றும் நடக்கவில்லை.இறைவன் காலச்சக்கரத்தை தன் கையில் வைத்துக்கொண்டு, தான் நாடியவாறு சுழற்றுகிறான்;.(இன்பம், துன்பம், சோதனை போன்ற) இத்தகைய காலங்களை மனிதர்களுக்கு மத்தியில் நாமே மாறி மாறி வரச் செய்கிறோம் - அல்குர்ஆன்: (3:140)யாரை உயர்த்துவது, யாரைத் தாழ்த்துவது, யாருக்குக் கொடுப்பது, யாரை எடுப்பது என்று எல்லா விஷயங்களையும் தீர்மானிக்க,ஒவ்வொரு நாளும் அவன் காரியத்திலே இருக்கிறான் - அல்குர்ஆன்: (55:29)இத்தகைய கருத்தை வலியுறுத்தும் ஏராளமான வசனங்கள் குர்ஆனில் உள்ளன. இதையெல்லாம் நாம் உணர்ந்தால் காலத்தையோ, நேரத்தையோ குறைகூறி இறைவனின் கோபத்திற்குள்ளாக மாட்டோம்.நாம் விரும்பாத, நமக்கு துன்பம் தரக்கூடிய செயல்கள் வாழ்க்கையில் ஏற்படத்தான் செய்யும். அப்போது அதற்கான காரணங்களை அலச வேண்டும். காரணம் நம் கட்டுப்பாட்டை மீறியதாக இருந்தால்,(முஸ்லிம்களே..) நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், விளைச்சல்கள், உயிர்கள் ஆகியவற்றின் இழப்புகளால் சோதிப்போம். (காலத்தை சபிக்காமல்) பொறுமையை கைக்கொள்ளுவோருக்கு நன்மாராயம் உண்டு, (பொறுமையுடைய) வர்களுக்கு எந்த துன்பம் ஏற்பட்டாலும், நாங்கள் அல்லாஹ்விற்குரியவர்கள், நிச்சயமாக அவனிடமே திரும்பிச் செல்வோம் என்று கூறுவார்கள் நேர்வழி பெற்ற இவர்களுக்குத்தான் இறைவனின் நல்லாசியுண்டு - அல்குர்ஆன்: (2:155,156) காலத்தைக் குறைகூறி, ஷைத்தானுக்கு துணைபோய், தனக்குத் தானே இழிவை ஏற்படுத்திக் கொள்ளாமல் தம்மைப் பாதுகாத்துக் கொள்வது ஒவ்வொரு முஸ்லிம் மீதும் கடமையாகும். *15-01-08*

Mail Received on Tuesday 15,January,2008 Name: Jahangir email: jahaonline@....Location: Saudi arabia Subject: Reminder Message:அதைக்கேட்ட மூஸா (அலை) அவர்கள் , ” அவ்விதமாயின் நானும் என் மக்களும் தாம் உங்களையும்விட மூஸா(அலை) அவர்களுக்கு மிகவும் நெருக்கமானவர்கள்” என்று கூறி அது முதல் தாங்களும் நோற்று தம் மக்களையும் அவ்வாறே நோன்பு நோற்குமாறும் பணித்தனர்.(புகாரி, முஸ்லிம், அஹ்மத்)please read the above paragraph the first line should be Prophet Mohamed name not Prophet Moosa ...please correct this.

உடனடியாக சுட்டிக் காட்டியதற்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். திருத்தி விட்டோம். நிர்வாகம்.