எழுதியவர்:- மௌலவி முஹம்மத் ஜலீல் மதனீ
புகழனைத்தும் ஏகவல்லவனான அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தாகட்டும். சாந்தியும் சமாதானமும் எங்கள் வழிகாட்டியும் நபியுமான முஹம்மத் (ஸல்) அவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினர், தோழர்கள் அவர்வழியைப் பின்பற்றியோர் அனைவர் மீதும் உண்டாகட்டும். ஆமீன்தொழுகையில் ஏற்படும் தவறுகள் எனும் பெயரில் இப்பிரசுரத்தை உங்கள் முன் சமர்ப்பிப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன். இதில் பெரும்பாலும் எம்மவர்கள் மத்தியில் தொழுகையின் போது நிகழக்கூடிய தவறுகளை நபிவழியின் நிழலிலே சுட்டிக் காட்டுகின்றேன். தொழுகையானது வணக்கங்களிலேயே ஒரு தலையாய வணக்கமாகும். இஸ்லாத்தின் பார்வையில் தொழுகைக்கு இருக்கும் முக்கியத்துவத்தை அறிந்துகொள்ள முஸ்லிமுக்கும் காபிருக்கும் இடையிலுள்ள வித்தியாசம் தொழுகை தான் ‘ என்ற நபிமொழியே போதுமானதாகும்.. பொதுவாக எந்தவொரு வணக்கமாக இருந்தாலும் அது இக்லாஸூடன் நிறை வேற்றப்பட்டாலே அதற்கு நற்கூலி கிடைக்கும். அதே போல் நாம்புரியும் வணக்க வழிபாடுகள் நபியவர்களின் வழிகாட்டலின் படி அமையும் போதே அதை வணக்கமாகக் கருதப்படும். இல்லாவிட்டால் அது ஒரு நூதன அனுஷட்டானமாகபித்அத்தாகவே கருதப்படும். எனவே நாம் செய்யும் வணக்கங்கள் முழுக்க முழுக்க நபிவழிப்படி அமையப் பெற்றுள்ளதா? எனக் கவனித்து வருவது அத்தியாவசியமாகும். இந்தவகையில் கீழேவரும் குறிப்பில் அதிகமாக தொழுகையில் நம்மவர்களுக்கு ஏற்படும் சில தவறுகளைச் சுட்டிக் காட்டியுள்ளேன். எனவே இவ்வாறான தவறுகள் ஏற்படுவோர் அவற்றைத் திருத்திக் கொள்வதோடு, இத்தவறுகளை எவரேனும்செய்வதைக் கண்ணுற்றால் அதனை அவர்களுக்குப் பக்குவமாக எடுத்துச் சொல்லி அவர்களும் அவற்றைத் திருத்திக் கொள்ள வழிவகுக்குமாறு இஸ்லாத்தின் பெயரால் கேட்டுக் கொள்கின்றேன்..1-ஒரு சிலர் நிய்யத்தைச் சத்தமிட்டுச் சொல்கின்றனர். வுழூச் செய்யும் போதோ அல்லது தொழுகைக்கு நிய்யத் வைக்கும் போதோ இவ்வாறு நிகழ்கின்றது. ‘லுஹறுடைய பர்ழு நான்கு ரக்அத்துக்களை அதாவாக கிப்லாவை முன்னோக்கி ஜமாஅத்தாகத் தொழுகின்றேன்’ என்பதுபோன்ற வாக்கியங்களைத் தழிழிலோ அரபியிலோ ஓதியே எம்மில் பலர் தக்பீர் கட்டுகின்றனர்.நிய்யத் என்பதன் அர்த்தமே மனதால் எண்ணுதல் எனும் பொருளை உணர்த்தி நிற்கின்றது. எனவே வாயால் அதைச் சொன்னால் நிய்யத் எனும் சொல்லுக்கே அர்த்தமில்லாமற் போய்விடுகின்றது ‘நான் நினைத்தேன்’ எனும்போது அதை நான் வாயால் சொல்லவில்லை எனும் கருத்தை அங்கே மறைமுகமாக உணர்த்தி நிற்கின்றது. நபியவர்களோ ஸஹாபாக்களோ அதன் பின் வந்த அறிஞர்களோ இவ்வாறு செய்யவில்லை. மாறாக இதனைக்கண்டித்திருக்கின்றார்கள். இப்னு தைமிய்யா எனும் அறிஞர் குறிப்பிடும் போது ‘இது மார்க்க அறிவற்றவர்களின் செயல் மாத்திமின்றி புத்தியற்றவர்களின் கண்டுபிடிப்புமாகும்; ஏனெனில் இதுவொரு வெறுக்கத்தக்க பித்அத்தாகும்‘ எனக் கூறுகின்றார்கள்.2- தொழுகையில் அணிவகுத்து ‘ஸப்’பில் நிற்கும் போது முதல் அணி முழுமை பெறுவதற்கு முன்பே இரண்டாவது அணியிணை சிலர் ஆரம்பித்து விடுகின்றனர்.இது மிகத் தவறானதும் நபிவழிக்கு மாற்றமானதுமாகும். நபியவர்கள் அணிகளை சீராக்கும் விடயத்தில் விஷேட கவனஞ் செலுத்தியிருக்கின்றார்கள். ‘உங்கள் அணி வரிசைகளைச் சீர்படுத்திக் கொள்ளுங்கள் ஏனெனில் வரிசைகளைச் சீர்படுத்துவதன் மூலமே தொழுகை நிலைநாட்டப்படுகின்றது முழுமை பெறுகின்றது’ என்று கூறினார்கள். ஆதாரம் - புகாரி -6713- தொழுகைக்குத் தக்பீர் கட்டியதன் பின்னர் ஒருசிலர் கைகளை அப்படியே கீழே தொங்க விட்டு விடுகின்றனர். (வேறு சிலர் வயிற்றின் மேல் கையை வைக்கின்றனர்). இவ்விரண்டுமே தவறானதும் நபியவர்களின் வழிமுறைக்கு மாற்றமானதுமாகும். நபியவர்கள் தக்பீர் கட்டியதும் தமது வலது கையினை இடது இடது கை மீது வைத்து அதனை நெஞ்சின் மீது வைப்பார்கள்.. ஆதாரம் அபூதாவுத் - 6484-தொழுகையாளிகள் சிலர் ஸூரத்துல் பாத்திஹா மற்றும் சிறிய ஸூராக்களை ஓதும் போது தனக்குக் கேட்குமளவுக்கு வாயால் சத்தமிடாமல் மனதால் மாத்திரமே ஓதுகின்றனர் இன்னும் சிலர் அளவுக்கதிகமாகச் சத்தமிட்டு பிற தொழுகையாளிகளைத் தொந்தரவு செய்கின்றனர். இவ்விரண்டுமே சரியான வழியல்ல. குறைந்த பட்சம் தனக்குக் கேட்குமளவுக்கு சத்தமிட்டு ஓத வேண்டும். அதே வேளை பிறதொழுகையாளர்களுக்குத் தொந்தரவு ஏற்படும் வகையில் சத்தமிடவும் கூடாது. அல்லாஹ் அல்குர்ஆனில். ‘ நீர் உமது இரட்சகனை மனதினாலே உள்ளச்சத்துடனும், பயபக்தியுடனும் வார்த்தையால் சத்தமிடாமல் காலையிலும் மாலையிலும் துதித்து வருவீராக’ என்று கூறுகின்றான். ஒரு இமாமைப் பின்பற்றித் தொழுபவர்கள் அவர் ஸூரத்துல் பாத்திஹா சத்தமிட்டு ஓதியதன் பின் மஃமூம்களும் ஓத வேண்டுமா?என்பதில் அறிஞர்களுக்கு மத்தியில் பலத்த கருத்து வேற்றுமைகள் இருந்த போதிலும் அதிக அறிஞர்கள் தெரிவு செய்த கருத்தின் பிரகாரம் மஃமூம்களும் பாத்திஹா ஓத வேண்டும் என்பதே மிகச் சரியானதாகும். ஆதாரம் அபூதாவூத்5- இமாம் பாத்திஹா ஸூரா ஓதி முடித்து ஆமீன் கூறும் போது சிலர் ஆமீன் கூறாதிருக்கின்றனர். வேறு சிலர் மனதினால் சத்தமிடாமல் ஆமீன் கூறுகின்றனர். இவ்விரண்டுமே நபிவழிக்கு மாற்றமானதாகும். நபியவர்கள் கூறியுள்ளார்கள் இமாம் ஆமீன் கூறினால் நீங்களும் (சேர்ந்து) ஆமீன் கூறுங்கள். ஏனெனில் மலக்குகளும் உங்களுடன் ஆமீன் கூறுகின்றனர். யாருடைய ஆமீன் மலக்குகளின் ஆமீனோடு நேர்படுகின்றதோ அவரது முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்பட்டு விடுகின்றன.. (ஆதாரம் - புகாரி 738)6- தொழுகையின் போது நிலையில் நிற்கும்வேளை சிலர் தமது பார்வைகளை அங்குமிங்கும் செலுத்துகின்றனர்.. வேறு சிலர் தலையை மேல் நோக்கி உயர்த்திய வண்ணம் தொழுகின்றனர். இவ்விரண்டு விடயங்களும் தடைசெய்யப்பட்ட விடயங்களாகும். இவ்வாறு தமது பார்வைகளை மேல் நோக்கியோ, அங்குமிங்குமோ செலுத்துபவர்களை நபியவர்கள் கடுமையாகக் கண்டித்துள்ளார்கள். ‘அவர்கள் தமது அச்செயலிலிருந்து தவிர்ந்து கொள்ளட்டும் அல்லது அவர்களது பார்வைகள் அப்படியே மேல்நோக்கிச் சொருகப்படட்டும்’ என நபியவர்கள் எச்சரித்திருப்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். (ஆதாரம் புகாரி 708 முஸ்லிம் 651)7- இரண்டு பேர் மாத்திரம் ஜமாஅத் தொழுகை நடத்தும் நிலை ஏற்படும்போது மஃமூமாக நிற்பவர் இமாமை விட்டும் சற்று பின்னாலாகி நின்று தக்பீர் கட்டுவதை, அல்லது இமாம் தன் பாதத்தை மஃமூமின் பாதத்தை விட கொஞ்சம் முன்னால் வைத்துக் கொள்வதைக் காண முடிகின்றது. இதுவும் தவறாகும். இவ்வாறான சந்தர்ப்பத்தில் மஃமூம் இமாமிற்கு வலது புறமாக அவரது பாதத்திற்குப் பக்கத்தில் தன் பாதம்இருக்கும் வகையில் வைத்துத் தக்பீர் கட்டுவதே நபி வழியாகும். இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கும் ஒரு ஹதீதில் ‘நான் ஒரு முறை நபியவர்கள் தனியே தொழுது கொண்டிருக்கும் போது அவர்களின் இடது புறம் தக்பீர் கட்டி நின்றேன். நபியவர்கள் என்னைத் தனது வலது புறத்திற்கு இழுத்து தன் பக்கத்தில் நிற்க வைத்தார்கள் என்று அறிவிக்கின்றார்கள். (ஆதாரம் - புகாரி 135)8- ஒரு சில சகோதரர்கள் பள்ளிக்கு நேரத்திற்கு வந்தாலும் இகாமத் சொல்லப்படும் வரை வெளியே பேசிக் கொண்டிருந்து விட்டு இகாமத் சொல்லப்படும் போதே பள்ளிக்குள் நுழைகின்றனர். இது தவறான ஒரு செயல் மாத்திரமின்றி ஷைத்தானின் ஏமாற்று வேலையுமாகும். ஏனெனில் இதன் காரணத்தால் அவர்களுக்கு ‘ தஹிய்யத்துல் மஸ்ஜித் தொழுகை அல்லது முன்னுள்ள ஸூன்னத் தொழுகை போன்றன தவறி விடுகின்றன.நபியவர்கள் கூறியுள்ளார்கள்: ‘எவர் பர்ழுத் தொழுகைகளுக்கு முன் ராத்திபத்தான (வழக்கமாக) 12 ரக்அத்துகள் தொழுது வருகின்றாறோ அல்லாஹ் அவருக்காக சுவர்க்கத்தில் ஒரு மாளிகை கட்டுகின்றான். (ளுஹ்ருக்கு முன் நான்கு ரக்அத்துக்கள், பின் இரண்டு, மஃரிபுக்குப் பின் இரண்டு, இஷாவுக்குப்பின் இரண்டு, ஸூப்ஹூக்குமுன் இரண்டு ரக்அத்துக்களாகும் (ஆதாரம் முஸ்லிம் 1197- திர்மிதி 380)9- சில சகோதரர்கள் இமாம் ருகூஉக்குச் சென்ற நிலையில் பள்ளிக்குள் பிரவேசிக்க ஏற்பட்டால் அவசரமாக விழுந்தடித்துக் கொண்டு ஓடிச் சென்று அந்த ரக்அத் தவறி விடக் கூடாது எனும் எண்ணத்தில் இமாமுடன் இணைந்து கொள்கின்றனர். இது தவறாகும். இதனால் ஏனையோருக்குத் தொழுகையில் இடைஞ்சல் ஏற்படுகின்றது. நபியவர்கள் கூறியுள்ளார்கள். நீங்கள் பள்ளிக்கு வரும் போது அமைதியாகவும் கண்ணியத்துடனும் வாருங்கள். நீங்கள் இமாமுடன் தக்பீர் கட்டியதன் பின் உங்களுக்குக் கிடைத்த ரக்அத்துகளை அவருடன் தொழுங்கள். தவறி விட்ட ரக்அத்துக்களை இமாம் ஸலாம் கொடுத்ததன் பின் பூரணப் படுத்திக் கொள்ளுங்கள் என்று நபியவர்கள் கூறினார்கள். (ஆதாரம் . புகாரி 591)அவ்வாறே அபூபக்ராஃ எனும் நபித் தோழர் இவ்வாறு செய்த போது நபியவர்கள் தொழுது முடிந்த பின் அவரை அழைத்து ‘அல்லாஹ் நீர் இபாதத்தின் மீது வைத்திருக்கும் ஆவலை அதிகரிப்பானாக, எனினும் மறுபடியும் இப்படிச் செய்யாதே ‘ என்று சொல்லியனுப்பினார்கள். (ஆதாரம்: புகாரி 741 )10 எம் முஸ்லிம் சகோதார்களில் அதிகமானோர் தொழுகையில் செய்யும் மற்றொரு தவறுதான் தொழுகையில் இமாமை முந்திக் கொண்டு ருகூஉ ஸூஜூது போன்றவற்றுக்குச் செல்கின்றனர். இது மிகப் பெரிய தவறாகும். நபியவர்கள் சொல்லியுள்ளார்கள் ‘உங்களில் இமாமை முந்திக் கொண்டு (ருகூஉவில் தலையை உயர்த்துபவர் அவரது தலையை கழுதையின் தலை போல் அல்லது அவரது உருவத்தை கழுதையின் உருவத்தைப் போல் அல்லாஹ் மாற்றி விடுவான் என்று பயப்பட வேண்டாமா? என்று கூறினார்கள். (ஆதாரம் புகாரி 650)11 -சில சகோதரர்கள் ருகூஉவை விட்டு நிலைக்கு வந்ததும் இரு கரங்களாலும் முகத்தைத் தடவிக் கொள்வதுடன் இரு கரங்களையும் முகத்திற்கு நேராக துஆவுக்கு உயர்த்துவது போன்ற உயர்த்துகின்றனர். இதுவும் தவறாகும் நபி வழிப்படி ருகூஉவைவிட்டு எழுந்ததும் இரு கைகளையும் காதுகளுக்கு நேராக அல்லது தோள்ப்புயத்திற்கு நேராக உயர்த்துவதே நபிவழியாகும். ஸாலிம் எனும் நபித்தோழர் கூறுகின்றார்கள்… நபியவர்கள் தொகைக்காகத் தக்பீர் கட்டும் போதும் ருகூஉக்குச் செல்லும் போதும் ருகூஉவிலிருந்து எழும் போதும் தம்மிரு கைகளையும் தோள்ப்புயத்திற்கு நேராக உயர்த்துவார்கள். ஸூஜூதுக்குச் செல்லும் போது இவ்வாறு செய்யமாட்டார்கள். (ஆதாரம் -புகாரி 693 )மாலிக் எனும் நபித்தோழர் அறிவிக்கும் ஹதீஸில் ‘நபியவர்கள் இரு காதுகளுக்கும் நேராக உயர்த்தியதாகக் கூறுகின்றார்கள். (ஆதாரம் முஸ்லிம் -693) எனவே இவ்விரு முறைப்படியும் செய்வதற்கு அனுமதியுண்டு என்பதனை இவ்விரு ஹதீதுகளின் மூலமும் அறிய முடிகின்றது.12 -மேலும் சில நண்பர்கள் இமாமைப் பின்பற்றித் தொழும் போது இமாமை விட்டும் பிந்துகின்றனர். உதாரணமாக இமாம் ருகூஉவை விட்டு எழுந்ததன் பின்னரும் மஃமூம் ருகூஊவில் இருந்து எழும்புவதற்குத் தாமதிப்பதை அவதானிக்க முடிகின்றது. அவ்வாறே சிலர் இமாம் ருகூஉ செய்ய ஆயத்தமானதுமே மஃமூம்களும் சற்றும் தாமதிக்காது ருகூஉ செய்துவிடுகின்றனர். சிலர் ருகூஉவில் அல்லது ஸூஜூதில் ஓதவேண்டிய துஆக்களை மும்முறை ஓதாமல் எழக் கூடாது என்ற தவறான எண்ணத்தினால் இவ்வாறு இமாமை விட்டும் பிந்துகின்றனர். இதுவும் நேரிய நபிவழிக்கு மாற்றமானதாகும் இமாம் ருகூஉக்குச் சென்ற பின்னரே மஃமூம் ருகூஉக்குச் செல்ல வேண்டும். நபியவர்கள் கூறியுள்ளார்கள்.’ இமாம் நியமிக்கப்பட்டிருப்பது அவரைப் பின்பற்றி (மஃமூம்கள்) தொழுவதற்காகவேயாகும். எனவே அவர் தக்பீர் கட்டினால் நீங்களும் தக்பீர் கட்டுங்கள் ருகூஉக்குச் சென்றால் நீங்களும் ருகூஉ செய்யுங்கள். அவர் கிராஅத் ஓதினால் நீங்கள் செவிசாய்த்துக் கேட்டுங் கொண்டிருங்கள். (ஆதாரம் புகாரி 365, 647 )13 -சில மக்கள் மஃரிப் , இஷா போன்ற 3, 4 ரக்அத்துத் தொழுகைகளிலும் இறுதி ரக்அத்தில் அத்தஹிய்யாத்தில் இருக்கும் போதும் இப்திராஸ் இருப்பு (அதாவது இடது காலின் வெளிப்பகுதியை நிலத்துடன் வைத்து உட்பாகத்தின் மேல் அமர்ந்து கொண்டு வலதுகால் பாதத்தை நட்டி வைத்து அதன் விரல்களை மடக்கி வைத்திருக்கும் இருப்பு) இருக்கின்றனர். இது நல்லதல்ல. இரண்டு ரக்அத்துடைய தொழுகையில்,அல்லது நடு இருப்பில்தான் இவ்வாறு இருக்க வேண்டும். 3, 4 ரக்அத்து கொண்ட தொழுகைகளின் இறுதி அத்தஹிய்யாத்தில் தவர்ருக் இருப்பு இருப்பதே ஸூன்னத்தாகும். (அதாவது பித்தட்டை நிலத்தில் வைத்து இடது காலை வலது முன்னங்காலின் நடுப்பகுதியில் படும் வகையில் வைத்திருப்பதற்கே இவ்வாறு சொல்லப்படும்.) இதற்கு மாற்றமாச் செய்வது தவறில்லாவிடினும் இவ்வாறு செய்வதே நபி வழியாகும்.ஆதாரம் (அபுதாவூத் 323)14-சிலர் ஸூஜூது செய்யும் போது மூக்கு நிலத்தைத் தொடாத வகையில் அதை உயர்த்தி வைக்கின்றனர். வேறு சிலரோ இரண்டு பாதங்களின் விரல்களும் தரையைத் தொடுகின்றனவா? என்று உறுதிப்படுத்தத் தவறி விடுகின்றனர். இது தவறாகும் நபியவர்கள் கூறினார்கள் ‘ நான் ஏழு உறுப்புக்களின் உதவியுடன் ஸூஜூது செய்வதற்கு ஏவப்பட்டுள்ளேன் . இரு கால்பாதங்கள், இரு உள்ளங்கைகள், இரு முட்டுக் கால்கள்,நெற்றி ஆகியவையே அந்த உறுப்புக்களாகும் என்று கூறினார்கள். இதை அறிவிக்கும் ஸஹாபி ‘ நபியவர்கள் நெற்றிப்பகுதி என்று குறிப்பிடும் போது தமது மூக்கின் மீதும் விரலால் சுட்டிக் காட்டினார்கள் ‘ என்று கூறுகிறார்கள். (ஆதாரம் புகாரி 648 )(நெற்றிப்பகுதி முழுமையாகத் தரையில் படுவதென்பது மூக்கும் தரையில் படும்போதே சாத்தியமாகும்.)15 -சில சகோதரர்கள் தொழுகையின் இறுதியில் ஸலாம் கொடுக்கும் போது தலையைக் கீழ் நோக்கி மேலாக அசைத்து அதன் பின்னரே ஸலாம் கொடுக்கின்றனர். இவ்வாறு செய்வதற்கு நபி வழியில் எவ்வித ஆதாரமும் இல்லை. நபியவர்கள் ஸலாம் கொடுக்கும் போது வலது, இடது புறமாகத் திரும்பியே ஸலாம் கொடுத்திருக்கின்றார்கள். எனவே இதுவே நபிவழியாகும். இவ்வாறே மற்றும் சிலர் வலது, இடது புறங்கள்திரும்பும்போது மிகவும் குறைந்த அளவே திரும்புகின்றனர் இதுவும் சரியல்ல. மாறாக பின் வரிசையில் இருப்பவருக்கு நம் கன்னம் தெரியுமளவுக்கு நன்றாகத் திரும்ப வேண்டும். இதுவே நபி வழியாகும்.16 -இன்னும் சில சகோதரர்கள் அத்தஹிய்யாத்தில் இருக்கும் போது ஒரு காலின் மீது மற்றொரு காலை வைத்து உட்காந்த வண்ணம் இருக்கின்றனர். இதுவும் தவறாகும். நபிவழியின் படி முன்னர் குறிப்பிட்ட முறைப்படி இப்திராஸ் அல்லது தவர்ருக் இருப்பு இருப்பதே நபிவழியாகும். நோய் காரணமாக அல்லது காலில் இருக்கும் காயம் போன்றவற்றுக்காக இவ்வாறு செய்யலாம்.17 -இமாம் ஜமாஅத்திற்குத் தாமதமாக வந்து சேரும் சகோதரர்கள், தமக்குக் கிடைக்கத் தவறிய ரக்அத்துக்களை இமாம் ஸலாம் கொடுத்த பின்னர் தனியாக எழுந்து தொழ வேண்டும். ஆனால் சில சகோதரர்கள் இமாம் ஒரு ஸலாம் கொடுத்ததுமே அவசரப்பட்டுக் கொண்டு எழுந்து தமக்குத் தவறியதைத் தொழ ஆரம்பித்து விடுகின்றனர். இதுவும் தவறாகும். மாறாக இமாம் இரண்டு ஸலாம்களையும் கொடுத்ததன் பின்னரேமஃமூம்கள் தமக்குத் தவறியவற்றை எழுந்து தொழ வேண்டும். இதுவே நபிவழியாகும்.18 -அதிகமான சகோதரர்கள் ஜமாஅத் தொழுகை முடிவடைந்ததும் விழுந்தடித்துக் கொண்டு பள்ளிவாயலை விட்டு வெளியேறி விடுகின்றனர். அவசர வேலை நிமித்தம் இவ்வாறு செல்ல அனுமதி இருந்தாலும் ஏனைய நேரங்களில் தொழுகையின் பின் நபியவர்கள் கற்றுத் தந்த திக்ர் அவ்ராதுகள் துஆக்களை ஓதுவதை வழக்கமாகக் கடைப்பிடித்து வருவதே நபிவழியாகும். நபியவர்கள் தொழுகை முடிந்ததும் ஓதுவதெற்கென அனேகதுஆக்களைக் கற்றுத் தந்திருக்கின்றார்கள்.- தொழுகையின் பின் அஸ்தஃபிருள்ளாஹ் என மூன்று தடவைகள் சொல்லல்.- அல்லாஹூம்ம அந்தஸ்ஸலாம், வமின்கஸ்ஸலாம், தபாரக்த யாதல் ஜலாலி வல் இக்ராம். என்று சொல்லல்.- ஆயத்துல் குர்ஸியை ஓதுதல்.- குல் ஸூராக்களை ஓதுதல்.- ஏனைய தமது தேவைகளைப் பிராத்தித்தல்போன்றவற்றை முடிந்தளவு தவறாமல்செய்து வருவது நபி வழியாகும்.இதற்கு மாற்றமாக சில பள்ளிவாயல்களில் தொழுகையின் பின்னர் கூட்டாக சத்தமிட்டு திக்ர் செய்தல், கூட்டுப் பிரார்த்தனை புரிதல் போன்றன மார்க்கத்தின் பெயரால் அரங்கேற்றப்பட்டு வருகின்றன. பள்ளிவாயலின் கதீப்மார்களே இவற்றை முன்னின்று நடாத்தி வருவதே வேதனைக்குரிய விடயமாகும். இவை யாவுமே நபிகளார் காட்டித்தராத பித்அத்தான நூதன அனுஷ்ட்டானங்களாகும். பள்ளிவாயலில்இமாமாக இருப்பவர்கள் இவ்விடயத்தில் அல்லாஹ்வைப் பயந்து கொள்ள வேண்டும். நபியவர்கள் கூறியுள்ளார்கள் அனைத்து பித்அத்துக்களும் வழிகேடாகும். அனைத்து வழிகேடுகளும் நரகத்துக்கே கொண்டு சேர்க்கும். (ஆதாரம்புகாரி 1435) எனது மார்க்கத்தில் இல்லாத ஒரு விடயத்தைப் புதிதாகஎவரும் ஆரம்பித்தால் அதுமறுக்கப்பட்டதாகும். (புகாரி 2499 முஸ்லிம் 3243)..19 -ஒரு சில மக்களிடம் உள்ள பழக்கம் யாதெனில் ஜமாஅத் தொழுகை நிறைவு பெற்றதும் அவர்கள் தம் வலது, இடது புறம் இருப்பவர்கள் பக்கம் திரும்பி ஸலாம் கூறி முஸாபஹா செய்து கொள்கின்றனர். இதுவும் நபியவர்கள் காட்டித்தராத ஒரு நூதன அனுஷ்ட்டானமாகும். ஸலாம் கூறுவதாயினும், முஸாபஹா செய்வதாயினும் ஒருவரை முதல் முறை சந்திக்கும் போது செய்வதே நபிவழியாகும். எனவே இந்த பித்அத்தைத்தவிர்ப்பது அனைவருக்கும் கடமையாகும்.20 -எம்மில் அதிகமான சகோதரர்கள் தஸ்பீஹ், திக்ர் செய்யும் போது அதற்காக தஸ்பீஹ் மணி –ன்னும் ஜெபமாலையை உபயோகிக்கின்றனர். இதை உபயோகிக்காமல் தஸ்பீஹ் செய்யும் போது சிலருக்கு தஸ்பீஹ் செய்த திருப்தியே ஏற்படாத அளவுக்கு இந்த ஜெபமாலை சிலரை போதையேற்றியுள்ளது. ஆனால் நபி (ஸல்) மற்றும் ஸஹாபாக்களுடைய வரலாற்றைப் பார்க்கும்போது அவர்கள் இவ்வாறான மணிமாலைகளையோ, கற்களையோஉபயோகித்து தஸ்பீஹ் செய்ததாக எவ்வித சரியான ஆதாரத்தையும் காணமுடியவில்லை மாறாக ‘ நீங்கள் உங்கள் விரல்களால் திக்ரைக் கணக்கிடுங்கள் என்றும், விரல்கள் மறுமையில் சாட்சி சொல்லும் என்பது போன்ற ஆதாரங்களையே காணக் கிடைக்கின்றது. ஒருசிலர் மணிமாலையால் திக்ர் செய்வதற்குச் சில ஆதாரங்களை எடுத்து வைத்த போதிலும் அவையனைத்தும் இட்டுக்கட்டப்பட்ட அல்லது ஆதாரத்திற்குஎடுக்க முடியாதளவுக்குப் பலவீனமான ஹதீஸ்களாகும் என்பதை இதுபற்றி விஷேட ஆய்வினை மேற்கொண்ட அறிஞரான பக்ரு அப்துல்லாஹ் அவர்கள் குறிப்பிடுகின்றார்கள். பார்க்க நூல்: தஸ்பீஹ் மாலையின் வரலாறு’எனவே புதிதாக மார்க்கத்தில் புகுத்தப்பட்ட அன்னியக் கலாச்சாரத்தில் வந்துதித்த பித்அத்தான இந்த நடைமுறையை விட்டு விட்டு நபியவர்கள் சொல்லித்தந்த முறைப்படி அதிகமதிகம் திக்ர் செய்து வருவதுடன் கணக்கிட வேண்டிய அவசியம் ஏற்பட்டால் விரல்களால் எண்ணிக் கணக்கிட்டுக் கொள்வதே நபியவர்களை நேசிக்கும் ஒவ்வொரு முஸ்லிமினதும் கடமையாகும்.21 -எம்மில் சில சகோதரர்கள் பள்ளிக்கு வந்து தஹிய்யத்துல் மஸ்ஜிதோ, வேறு ஏதேனும் நபில் தொழுகையோ தொழாமல் அப்படியே உட்காந்து விடுகின்றனர் .நபியவர்கள் கூறியுள்ளார்கள்… உங்களில் எவரேனும் மஸ்ஜிதுக்குப் பிரவேசித்தால் பள்ளிவாயலின் காணிக்கையாக இரண்டு ரக்அத்துக்கள் தொழாத வரைக்கும் பள்ளியில் அமர்ந்து விட வேண்டாம் என்று தடை செய்துள்ளார்கள். ஆதாரம் புகாரி 1097இதனை அனைவரும் கவனத்தில் எடுத்தல் அவசியம். அதே போல் மற்றும் சிலர் பள்ளிக்குத் தாமதமாக வந்து இவ்வாறு தஹிய்யத்துல் மஸ்ஜித் தொழுகையை ஆரம்பிக்கின்றனர். இகாமத் சொல்லப்பட்டு ஜமாஅத் ஆரம்பமான பின்னரும் தொழுது கொண்டே இருந்து ஜமாஅத் தொழுகையின் ஓரிரு ரக்அத்துக்களைத் தவற விட்டு விடுகின்றனர். இதுபற்றி நபியவர்கள் கூறியுள்ளார்கள்… இகாமத் சொல்லப்பட்டு விட்டால் கடமையான பர்ழுத் தொழுகையைத் தவிர வேறு தொழுகை கிடையாது. ஆதாரம் (முஸ்லிம் 1160)அதாவது வேறு தொழுகை தொழக் கூடாது என்று கூறியுள்ளார்கள். எனவே சகோதரர்கள் தனியாகத் தொழுது கொண்டிருக்கும் போது இகாமத் சொல்லப்பட்டு ஜமாஅத் ஆரம்பித்துவிட்டால் அவர் தொழுது கொண்டிருப்பது முதலாவது ரக்அத் எனில் அத்தொழுகையை இடையிலேயே அப்படியே விட்டு விட்டு ஜமாஅத்துடன் சேர்ந்து கொள்ள வேண்டும். இரண்டாவது ரக்அத் எனில் சுருக்கமாக அவசரமாக அதை முடித்து விட்டுஜமாஅத் தொழுகையில் ஒரு ரக்அத் கூட தவறிவிடாத அளவுக்கு அவசரமாக ஜமாஅத்துடன் சேர்ந்து கொள்ள வேண்டும்.22- மேலும் சில சகோதரர்களிடம் காணப்படும் தவறான பழக்கம் யாதெனில் பள்ளிக்குள் பிரவேசிக்கும் இவர்கள் பள்ளியின் முதலாம் இரண்டாம் வரிசைகளெல்லாம் காலியாக இருந்தும் இவர்கள் பள்ளியில் பின்புறமோ அல்லது ஒதுக்குப் புறமாகவோதான் நிற்பார்கள். மேலும் சிலர் மேலதிக சொகுசு நோக்குடன் பள்ளியின் தூண் அல்லது சுவர்ப்பகுதியைத் தேர்வுசெய்துக் கொள்வார்கள். இதுபற்றிநபியவர்கள் என்ன சொல்லியிருக்கின்றார்கள் என்று கவனிக்கக் கடமைப் பட்டிருக்கின்றோம். ‘மக்கள் பாங்கு - அதான் சொல்வதற்கும், முதல் வரிசையில் நின்று தொழுவதற்கும் அல்லாஹ்விடத்தில் இருக்கும் வெகுமதியின் அளவை அறிந்து கொள்வார்களாயின் அதற்காக சீட்டுப்போட்டுப் பார்த்து அதிஷ்டசாலி மாத்திரமே முதல் வரிசையில் நிற்க முடியும் எனும் அளவுக்கு அவர்கள் தமக்குள் முண்டியடித்துக் கொண்டு போட்டிப் போடுவார்கள். அவ்வாறே ஸுபஹ், இஷாத் தொழுகைகளுக்குஅல்லாஹ்விடத்தில் இருக்கும் வெகுமதியை அவர்கள் அறிந்துக் கொண்டால் அதற்காக தம்மால் முடியாத நிலையில் கூட தவழ்ந்தாயினும் பள்ளிக்குச் சமூகமளிப்பார்கள். ஆதாரம். (புகாரி 580)23 -இன்னும் பல சகோதரர்களிடத்தில் காணப்படும் ஒரு தவறான விடயம்தான் அவர்கள் சாரம், பேண்ட் போன்றவற்றை அணியும்போது கரண்டைக் காலுக்கும் கீழாக அணிகின்றனர். இவ்விடயத்தில் மிக அதிகமானோர் பொடுபோக்காக நடந்து கொள்வதுதான் கவலைக்குரிய விடயமாகும். அதிகமானோர் இது கூடாது என்று தெரிந்துக் கொண்டே ஒரு நாகரீகம் கருதி இவ்வாறு செய்கின்றனர். மேலும் சிலர் இது பற்றிய விபரீதம்அறியாமலும் செய்கின்றனர். நபிகளாரின் வழிகாட்டலின் ஒளியில் இதை நோக்கினால் இது பற்றி மிகக் கடுமையாக அவர்கள் எச்சரித்திருப்பதை நாம் அறிய முடிகின்றது. ஒரு ஹதீதில் ‘கரண்டைக் காலுக்குக் கீழால் ஆடை தொங்கும் பகுதி நரகத்துக்குரிய பகுதியாகும்’ என்றும் மற்றொரு ஹதீதில் ‘பெருமை நோக்கில் எவர் தன் ஆடையைத் தன் கரண்டிக் காலுக்குக் கீழால் அணிகின்றாரோ அவரை அல்லாஹ் மறுமையில் ஏறெடுத்தும் பார்க்க மாட்டான்’ என்றும் கூறியுள்ளர்கள். (ஆதாரம் புகாரி 3392)ஒரு சில அதிமேதாவிகள்? ட்ரவுஸர், பேண்ட் போன்றவற்றை கரண்டைக்குக் கீழ் அணிவதில் தவறில்லை. ஏனெனில் அதன் அமைப்பே அவ்வாறுதான் என்று தத்துவம் பேசுன்றனர். மேலும் சிலர் பெருமைக்காக அணிவதுதான் தடை செய்யப்பட்டது. பெருமையின்றி அணிந்துக் கொள்வதில் தவறில்லை என்று புது விளக்கம் கூறுகின்றனர். இவை அனைத்துமே தவறானக் கருத்துக்களாகும். இது பற்றி தடைசெய்து வந்த ஹதீதுகள்பேண்ட், சாரம்(லுங்கி) என்றோ பெருமைக்காக, பெருமையன்றி என்றெல்லாம் வேறுபடுத்தவில்லை. மாறாக அனைத்துக்கும் பொதுவாகத்தான் வந்துள்ளது. எம்மை விட குர்ஆனையும் நபிமொழிகளையும் மிகச் சரியாக விளங்கிக் கொள்ளும் ஒட்டுமொத்த ஸஹாபாக்கள் சமூகமே இதனைப் பொதுவான தடையாகவே விளங்கினார்கள். பெருமைக்காக பெருமையல்லாது என்றெல்லாம் வேறுபடுத்திப் பார்க்கவில்லை. உமர் (ரழி) அவர்கள் குத்தப்பட்டு மரணப்படுக்கையில் இருக்கும் வேளை அவர்களைப் பார்க்க வந்த ஒரு நபித்தோழர் தனது ஆடையைத் தொங்க விட்டிருப்பதைக் கண்ணுற்றதும் நண்பரே! உமது ஆடையை உயர்த்திக் கொள்ளும் ஏனெனில் அது உனது ரப்பை நீ பயப்படுவதற்குக் காரணமாகும், மேலும் உன் உடையும் சுத்தமாயிருக்க உதவும் என்றார்கள். (முஸ்லிம்)அபூபக்ர் (ரழி) அவர்கள் நபிகளாரிடத்தில் ‘எனது ஆடை என்னை அறியாமலேயே கீழே இறங்கி வீடுகின்றதே! (ஒல்லியாக இருப்பதால்) என வினவியபோது ‘நீ பெருமைக்காக அதைச் செய்யவில்லை என்றார்கள். இதை வைத்துக் கொண்டே சிலர் பெருமையில்லாவிடில் அணியலாமென எண்ணுகின்றனர். இது தவறாகும். ஏனெனில் அபூபக்ர் (ரழி)யின் ஆடை அவரையறியாமலேயே கீழே இறங்கி விடுவதாகவும் அதனைக் காணும்போது தான்சரிப்படுத்திக் கொள்வதாகவும் ஹதீஸில் உள்ளது. எனவே தனக்குத் தெரியாமல் தனது ஆடை கீழே இறங்கினால் குற்றமில்லை என்றே இந்த ஹதீதின் மூலம் விளங்க முடியும். ஆனால் நம்மில் சிலரோ வேண்டுமென்றே நாகரீகம் கருதி பேண்டை நீளமாகத் தைத்து விட்டு பின்னர் பெருமைக்காக அணியவில்லையென்று வாதிடுகின்றனர். இது அர்த்தமற்ற வாதமாகும். எனவே இதைக் கட்டாயம் பேணி வர வேண்டும்.
No comments:
Post a Comment