Friday, May 28, 2010

"டயாலிசிஸ்' சிகிச்சை முறையை தானாகவே கற்றுக்கொண்ட பெண்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)


(இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக!)



"டயாலிசிஸ்' சிகிச்சை முறையை தானாகவே கற்றுக்கொண்ட பெண்"




மும்பை : மும்பையைச் சேர்ந்த ஒரு பெண், தனது கணவருக்கு அளிக்கப்படும் டயாலிசிஸ் சிகிச்சை முறையை தொடர்ந்து அருகில் இருந்து கவனித்து வந்ததால், தற்போது அவரே ஒரு டயாலிசிஸ் நர்சாக மாறிவிட்டார். தற்போது தனது கணவருக்கு மட்டுமல்லாமல், மருத்துவமனைக்கு வரும் மற்ற நோயாளிகளுக்கும் இவர் டயாலிசிஸ் சிகிச்சை செய்து வருகிறார்.




மும்பையைச் சேர்ந்தவர் இக்பால் ஷேக். இவரது மனைவி ஷெனாஸ். இருவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. திருமணம் ஆன சில மாதங்களிலேயே இக்பாலுக்கு சிறுநீரக கோளாறு ஏற்பட்டது. இரண்டு சிறுநீரகங்களுமே பாதிக்கப்பட்டன. மாதம்தோறும் டயாலிசிஸ் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டது. இக்பாலின் குடும்பம் போதிய வசதி இல்லாதது. டயாலிசிஸ் செய்வதற்காக மாதம்தோறும் 10 ஆயிரம் ரூபாய் செலவிட வேண்டியிருந்தது. இந்த நேரத்தில் இக்பாலுக்கு அவரது மனைவி ஷெனாஸ் பெரிதும் உதவியாக இருந்தார். இருந்த கொஞ்ச நிலங்களையும் விற்று சிகிச்சைக்காக செலவு செய்தார். இக்பாலின் தந்தையார், தனது ஒரு சிறுநீரகத்தை இக்பாலுக்கு தானமாக அளித்தார். இந்த அறுவை சிகிச்சை தோல்வியில் முடிந்தது. இக்பாலுக்கு மீண்டும் டயாலிசிஸ் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டது. கடன் வாங்கி தொடர்ந்து டயாலிசிஸ் சிகிச்சை மேற் கொள்ளப்பட்டது. இதற்கிடையே, தனது கணவருக்கு மேற்கொள்ளப்படும் டயாலிசிஸ் சிகிச்சை முறையை தொடர்ந்து அருகில் இருந்து கவனித்து வந்ததால், ஷெனாசுக்கு அதில் ஆர்வம் ஏற்பட்டது. டயாலிசிஸ் செய்யும் அடிப்படை விஷயங்களை தானாகவே அவர் அறிந்து கொண்டார்.



தனது கணவருக்கு சிகிச்சை செய்யப்படும் மருத்துவமனைக்கு சென்று, டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொள்ளும் நர்சாக தன்னை பணியமர்த்திக் கொள்ளும்படி வேண்டினார். ஷெனாசுக்கு முறையான கல்வித் தகுதி இல்லாததால், மருத்துவமனை நிர்வாகம் மறுத்து விட்டது. இருந்தாலும், பணியில் சேர்வதில் ஷெனாஸ் பிடிவாதமாக இருந்தார். அவரது ஆர்வத்தை அறிந்த மருத்துவமனை நிர்வாகம், அவருக்கு கூடுதலாக சில பயிற்சிகளை அளித்து, டயாலிசிஸ் நர்சாக சேர்த்துக் கொண்டது. தற்போது தனது கணவருக்கு மட்டுமல்லாமல், தினமும் பத்துக்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு ஷெனாஸ் டாயலிசிஸ் சிகிச்சை அளித்து வருகிறார். இதில் போதிய அளவு வருமானம் கிடைக்கிறது.



மேலும், மருத்துவமனையில் வேலை பார்ப்பதால், இவரது கணவருக்கான சிகிச்சை கட்டணங்களில் குறிப்பிட்ட அளவு தொகையை மருத்துவமனை நிர்வாகம் தள்ளுபடி செய்கிறது. இந்நிலையில், தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலமாக சிறுநீரகம் தானமாக பெறப்பட்டு, அது இக்பாலுக்கு பொருத்தப்பட்டது. இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. இனிமேல், அவருக்கு டயாலிசிஸ் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது என, டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.



இதுகுறித்து ஷெனாஸ் கூறியதாவது: துவக்கத்தில் என் கணவருக்கு சிகிச்சை அளிக்கும்போது, போதிய வருவாய் இல்லாததால் மனம் உடைந்து போய் விட்டேன். அறக்கட்டளை நடத்துவோரிடம் சென்று உதவி கேட்டேன். ஆனால், நானே ஒரு டயாலிசிஸ் நர்சாக மாறுவேன் என, கனவில் கூட நினைக்கவில்லை. இதுபோன்ற நோய்களால் பாதிக்கப்படுவோரின் மன வேதனையை நன்கு உணர்ந்துள் ளேன். எனவே, என்னிடம் சிகிச்சைக்கு வருவோரிடம் மனிதாபிமானத்தின் அடிப்படையில் அணுகுகிறேன்.இவ்வாறு ஷெனாஸ் கூறினார்.

No comments: