Sunday, July 11, 2010

முஸ்லிம்களும் ஊடகங்களும்

click to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own text


விஞ்ஞானம், அறிவியல், மருத்துவம் எனப் பலதுறைகளிலும் மனிதன் உச்சத்தை அடைந்து கொண்டே செல்கின்றான். இதில் குறிப்பாகக் கூற வேண்டுமெனில் மீடியா என்ற ஊடகத்துறை உலகில் அதிவேகமாகப் பரவியும் முன்னேறிக்கொண்டும் இருக்கின்றது. உலகளாவிய (Mass-Media) ஊடகங்களில் முஸ்லிம் சமுதாயமும், இஸ்லாமும் குறிவைத்து அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

இது போன்ற சூழலில் முஸ்லிம் சமுதாய மக்களுக்கு மீடியா என்றால் என்ன? அதன் அவசியம் என்ன? அதில் முஸ்லிம்களின் நிலை என்ன? மீடியாவில் எவ்வாறு நாம் தாக்கத்தை ஏற்படுத்தலாம்? என்று எடுத்துரைத்து துயில் கொண்டிருக்கும் நம் சமுதாயத்தை விழிப்படையச் செய்வதே இக்கட்டுரையின் நோக்கம்.

மீடியா?
உலகத்தில் பரந்து இருக்கும் இதழியல்கள், தொலைக்காட்சி சேனல்கள், திரைப்படம், வீடியோ கான்ஃபிரன்சிங், இணையம், தனிநபர் பிரச்சாரம், வானொலி மற்றும் அலைவரிசைகள் எனப் பெருவாரியான மக்களைச் சென்றடையும் செய்திகள் மற்றும் இதற்குப் பயன்படும் தகவல் தொடர்புக் கருவிகள், ஜனசக்தி ஆகிய அனைத்தும் ஊடகம் (Media) என்ற கருத்தாக்கத்தில் அடக்கிவிடலாம்.

ஊடகங்களில் முஸ்லிம்கள் எவ்வாறெல்லாம் பாதிப்புக்குள்ளாக்கப்படுகிறார்கள், இஸ்லாம் எவ்வாறெல்லாம் தவறாகச் சித்தரிக்கப்படுகின்றது என்பதைச் சொல்லிமாளாது. மீடியாவில் இவ்வாறான தீயசக்திகளை அறிந்து ஈடுகட்ட வேண்டிய நிர்பந்தத்தில்தான் முஸ்லிம்கள் இருந்து கொண்டிருக்கின்றார்கள்.

1) மீடியாக்களின் அவசியம்?
மீடியா ஒரு நாட்டின் அல்லது சமுதாயத்தின் நிறை, குறைகளை உலக மக்களின் கவனத்திற்குக் கொண்டு செல்கிறது. அதன் மூலம் அந்த நாட்டின் வளர்ச்சிக்கும், சமுதாயத்தின் வளர்ச்சிக்கும் வித்திட முடிகிறது. சில சம்பவங்களை எடுத்து அலசி, ஆராய்ந்துப் பார்த்தோமானால் மீடியாவின் அவசியம் என்ன என்பதை அனுமானித்துவிடலாம்.

சமீபத்திய ஈராக் போரை எடுத்துக்கொள்வோம், ஈராக்கின் பெட்ரோல் வளத்திற்கு ஆசைப்பட்டது அமெரிக்கா. அதை அபகரிக்க ஈராக்கை பயங்கரவாத நாடு என்று தன் ஆதரவு செய்தி ஊடகங்களான பி.பி.ஸி மற்றும் சி.என்.என் வழியாக உலகநாடுகள் மத்தியில் சித்தரித்தது. அணுஆயுதங்களை ஈராக் பதுக்கி வைத்திருக்கின்றதா? என ஐ.நா நிபுணர்கள் குழு ஆய்வு செய்து அவ்வாறு இல்லை என்று உறுதிபடக் கூறியது. எனினும் ஐ.நா'வின் சொல்லையும் மீறி அமெரிக்கா தன் தனி அதிகாரத்தைப் பயன்படுத்தி (Veto-Power) ஈராக் மீது போர் தொடுத்தது. அப்போது ஈராக்கை பலஹீனப்படுத்த முதன் முதலில் அமெரிக்கா தன் ஏவுகனைகளை ஈராக்கின் தகவல்தொடர்புக் கட்டிடத்தின் மீது வீசி அதை முற்றிலுமாக அழித்தது. காரணம், ஈராக்கினுள் தான் நடத்தப்போகும் அராஜக மனித மீறல்கள் உலகத்திற்குத் தெரிந்து விடக்கூடாது என்று மீடியாக்களின் வாசல்கள் அனைத்தையும் அடைத்தது.

ஈராக்கில் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட அப்பாவி முஸ்லிம்களை கொன்று குவித்தது அமெரிக்கா. இச்செய்திகளை அல்-ஜஸீரா மற்றும் சில இணைய ஊடகங்கள் வெளியுலகிற்குக் கொண்டு வந்தபோது அமெரிக்கா மற்றும் பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த மக்கள் கூட மனிதநேய அடிப்படையில் அமெரிக்காவை எதிர்த்துப் போர் நிறுத்தம் செய்யக் கூறி ஆர்ப்பாட்டங்கள் நடத்தினார்கள்.

அமெரிக்க இராணுவத்தினர் ஈராக்கில் அப்பாவி முஸ்லிம்களை கைதிகளாக்கி சிறையில் அடைத்தனர். அவர்களை நிர்வாணப்படுத்தி ஒருவரோடு ஒருவராகப் பிணைத்துப் போட்டனர். ஈராக் முஸ்லிம்கள் மீது மின்சார அதிர்வுகள் கொடுத்தும், கற்பழிப்புகள் நடத்தியும் கொடுமைப்படுத்தினர். இவையெல்லாம் இணைய ஊடகங்கள் வாயிலாகக் கடந்த ஏப்ரல் 2004-ல் புகைப்படங்களாக வெளிவந்த போது, அமெரிக்காவின் பாதுகாப்பு அமைச்சர் டொனால்ட் ரம்ஸ் பெல்ட் இத்தகைய இராணுவ வரம்புமீறல்களுக்கு மன்னிப்புக் கோரினார். இழந்த உடமைகளும், உயிர்களும் இவரின் மன்னிப்பின் மூலம் மீட்டிட முடியுமா? இல்லை!

இதே போன்று பாலஸ்தீனிய முஸ்லிம்கள் தங்கள் சொந்த மண்ணில் இஸ்ரேலிய யூத மக்களால் விரட்டியடிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இஸ்ரேல் என்ற இல்லாத ஒரு நாட்டை யூதர்கள் திட்டமிட்டு பாலஸ்தீனில் உருவாக்கிவிட்டார்கள். இவ்விஷயத்திலும் ஊடகங்கள் முஸ்லிம்களுக்கு எதிராக இன்றளவும் செயல்பட்டு வருகின்றன. வரலாறு நெடுகிலும் முஸ்லிம்களுக்கு எதிராக இவ்வாறான போர்கள் அரங்கேறியே வருகின்றன.

சமீபத்திய குஜராத் கலவரத்தை எடுத்துக்கொள்ளுங்கள், மோடி அரசின்போது இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கொடுமையான முறையில் கொலை செய்யப்பட்டனர். நூற்றுக்கணக்கான முஸ்லிம் பெண்கள் கற்பழிக்கப்பட்டார்கள், முஸ்லிம்களின் சொத்துக்கள் மதவெறி பிடித்தவர்களால் சூரையாடப்பட்டன.

குஜராத் கலவரத்தில் முஸ்லிம்கள் அநியாயமான முறையில் தடாக் கைதிகளாகவும், பொடாக் கைதிகளாகவும் கைது செய்யப்பட்டு விசாரணை மரபு மீறலையும் தாண்டி மயக்கமருந்து கொடுத்து நினைவிழக்கச் செய்தனர். விசாரணை என்ற பெயரில் சித்தரவதை செய்யப்பட்டனர். இச்செய்திகளை மீடியாக்கள் வெளியுலகத்திற்குக் கொண்டுவந்த போது உலகநாடுகள் குஜராத் சம்பவத்தை விமர்சித்தன. இந்தியாவிற்கு ஏற்பட்ட தலைகுனிவு குஜராத் சம்பவம் என எல்லோரும் கூறினர். அப்போதைய பிரதமர் வாஜ்பாய் எந்த முகம் கொண்டு இனி நான் வெளிநாட்டுப் பயணங்கள் மேற்கொள்வேன் என்று கூறினார். மீடியாவின் மூலமாக இச்சம்பவங்கள் வெளிவராமலிருப்பின் இன்னும் முஸ்லிம் சமுதாயம் நசுக்கப்பட்டுக் கொண்டே இருக்கும்.
மாற்று மதத்தில் ஒருவன் தவறு செய்தால் அதை அவனளவிலும், முஸ்லிம் ஒருவன் தவறு செய்துவிட்டால் அதை இஸ்லாத்தோடு இணைத்தும் செய்திகளை வெளியிடுவது முஸ்லிம்களுக்கு எதிரான மீடியாக்களுக்கு கைவந்த கலை. முஸ்லிம்கள் என்றால் வன்முறைகளைத் தூண்டுபவர்கள், தீவிரவாதிகள் என்று மாற்றார்கள் கூறும் மனோநிலைக்கு மீடியாக்கள் மக்களை மாற்றியிருக்கின்றன.

முஸ்லிம்களுக்கு எதிரான சூழ்ச்சிகளும், வன்முறைகளும் ஒருபுறம் என்றால் ஊடகங்களின் வாயிலாக இஸ்லாத்தின் மீது நடத்தப்படும் அவதூறான பிரச்சாரங்கள் மற்றொருபுறம். குர்ஆன், ஹதீஸ்களை திரிப்பதும், இஸ்லாமிய ஷரீயத் சட்டங்கள் நடைமுறைக்கு ஒவ்வாது, இஸ்லாம் பெண்களை அடிமைப்படுத்துகின்றது, பர்தா முஸ்லிம் பெண்களின் முன்னேற்றத்தைத் தடுக்கின்றது என்றெல்லாம் போலிப்பிரச்சாரங்கள் ஊடகங்களின் மூலமாக நடத்தப்படுகின்றன.

நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கை முறை, திருமணங்கள், போர்கள் ஆகியவைகளை தவறானமுறையில் ஊடகங்கள் சித்தரிக்கின்றன. எந்த அளவிற்கு என்று சொன்னால் அவர்களின் சூசகமான கருத்துக்களின் மூலம் பெயரளவில் முஸ்லிம்களாக இருப்பவர்கள் கூட நாத்திகவாதியாக மாறிவிடுமளவிற்கு அவர்களின் மொழிப்புலமை கொண்டும், வாதத் திறன் கொண்டும் இஸ்லாத்திற்கு எதிராகப் போர் தொடுக்கிறார்கள்.

உலக அளவில் முஸ்லிகள் பொட்டுப் பூச்சிகளைப் போல அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். முஸ்லிம்களின் வரலாறுகள், தியாகங்கள் எல்லாம் திட்டமிட்டு சிதைக்கப்படுகின்றது. பள்ளிகளில் பயில வரும் பிஞ்சுகளின் உள்ளங்களிலும் முஸ்லிம்கள் தீயவர்கள் என்ற நஞ்சை விதைக்கின்றனர். பாடதிட்டங்களில் தங்கள் மதக் கொள்கைகளைத் திணிக்கின்றனர். காவல் துறை, இராணுவம், அரசு நிர்வாகம் இவற்றில் முஸ்லிம்கள் திட்டமிட்டே புறக்கணிக்கப்படுகின்றார்கள். மக்கள் தொடர்பு கருவிகளான வானொலி, தொலைக்காட்சி மற்றும் பத்திரிக்கை ஊடகங்களில் வகுப்பு வெறி ஊடுறுவிவிட்டது. முஸ்லிம்கள் விரும்பாத தலைமைகளை மீடியாக்கள் மூலம் மக்கள் சக்தியை உருவாக்கி முஸ்லிம்கள்பால் சுமத்துகின்றன. நாம் மீடியாவில் அவசியத்தை உணராமலிருப்பதன் விளைவுதான் இத்தகைய தீய பலன்களை அடைய வேண்டியுள்ளது.

2) மீடியாவில் முஸ்லிம்கள் பின்தங்கியிருப்பதன் காரணங்கள்?
இந்திய முஸ்லிம்கள் பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்க்க ஆங்கிலம் கற்பது ஹராம் என்று கல்வி கற்க மறந்துவிட்டனர். ஆரம்பகாலத்தில் அரபி மொழி அறிந்தோர் பிறமொழியை அறிந்துகொள்ள ஆர்வம் காட்டாதது, இன்றளவும் அரபியர்களிடத்தில் இவ்வழக்கம் இருந்து கொண்டுதான் இருக்கின்றது. பிற மொழிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காத ஒரு நிலை.

ஒவ்வொரு நவீனக் கண்டுபிடிப்புகள் வந்தபோதெல்லாம் அதைத் தீய வழியில் பலர் பயன்படுத்துவதைக் கண்டு அஞ்சி முற்றிலுமாக அதை ஏற்றுக்கொள்ள மறுத்தனர். இன்றளவும் டி.வி இல்லாத பல இஸ்லாமிய இல்லங்கள் இருக்கத்தான் செய்கின்றன. டி.வி'யை எவ்வாறெல்லாம் நல்ல முறையில் பயன்படுத்தலாம் என்பதை அறிய முற்படாமல் டி.வி பார்ப்பது ஹராம் என்ற மார்க்கத் தீர்ப்பையும் வழங்கினர். வீடியோ மற்றும் புகைப்படம் எடுப்பது ஹராம் என்றும் கூறினர். அதை எவ்வாறு சமுதாய வளர்ச்சிக்கும், மார்க்க வளர்ச்சிக்கும் பயன்படுத்தலாம் என்று ஆமை வேகத்தில் அறிந்துகொண்டதன் பின்தான் ஆடியோ, வீடியோ, சி.டி, டி.வி.டி என பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறார்கள்.

திருக்குர்ஆனையும், நபிகளாரின் போதனைகளும் ஆரம்பகாலத்திலேயே மொழியாக்கம் செய்ய மறந்துவிட்டனர். மாறாக முன்னோர்களின் கட்டுக்கதைகளை கையிலெடுத்துக்கொண்டு இதுதான் மார்க்கம் என்று பிரச்சாரங்கள் செய்ய ஆரம்பித்துவிட்டதால் இஸ்லாம் அதன் தூயவடிவில் பலருக்கு கிடைக்காமல் சென்றுவிட்டது. இவ்வகையான முன்னோர்களின் திரிபு பெற்ற நூல்கள், பிரச்சாரங்கள் மீடியாவில் சரிகட்டவியலாத பின்னடைவை ஏற்படுத்திவிட்டன.

முஸ்லிம்கள் கல்வியில் ஆர்வம் காட்டாதது, புதிய கண்டுபிடிப்புகளை உடனே ஏற்க மறுத்தது, குர்ஆன், ஹதீஸ்களை தெளிவுபடுத்த மறந்தது, மார்க்கப் பிரச்சாரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்ததில் பாதியேனும் சமுதாய வளர்ச்சிக்குக் கொடுக்காதது, தான் உண்டு தன் வேலையுண்டு என்ற பிற்போக்கு மனப்பான்மை என்று முஸ்லிம்கள் மீடியாவில் பின்தங்கிப்போனதன் காரணங்களை அடுக்கிக்கொண்டே செல்லலாம். பொதுவாக முஸ்லிம்கள் ஊடகங்களில் பின் தங்கியிருப்பது அனைவரும் ஏற்றாக வேண்டிய கூற்று. எனவே இதை விரிவாக அலசுவதை விடுத்து ஊடகங்களில் நாம் எவ்வாறு முன்னேறலாம் என்பதை ஆய்வு செய்வோம்.

3) முஸ்லிம்கள் மீடியாக்களை எவ்வாறு பயன்படுத்தலாம்?
நவீன கண்டுபிடிப்புக்களைத் தூரநோக்கு பார்வை கொண்டு அங்கீகரிக்கவேண்டும். அதன் மூலம் முஸ்லிம்களுக்கு ஆதரவான மக்கள் சக்தியை உருவாக்க முஸ்லிம்கள் பாடுபடவேண்டும். மீயாக்களில் முஸ்லிம்கள் தாக்கத்தை ஏற்படுத்த பலவழிகள் உள்ளன, அவற்றில் சிலவற்றை மட்டும் இங்கே பட்டியலிட்டுப் பார்ப்போம்.

கல்வியின் முன்னேற்றம் ஊடகங்களின் வளர்ச்சிக்கு அடிகோலிடும்.
கல்வி கற்பதில் முஸ்லிம்கள் ஆரம்பம் முதலே ஆர்வம் காட்டாத நிலை. மனித அறிவின் பிறப்பிடம் கல்வி என்பதை ஏனோ முஸ்லிம்கள் மறந்துவிட்டார்கள். எழுத்தறிவில் மிகவும் பின்தங்கிய சமுதாய மக்களாக முஸ்லிம்கள் இருக்கின்றார்கள். இவ்வாறு இருக்கையில் கற்றறிந்த மாற்றார்கள் முஸ்லிம் சமுதாயத்தை ஊடகங்களின் வாயிலாக நசுக்குகிறார்கள். ஊடகங்களை எதிர்கொள்ள முஸ்லிம் சமுதாயத்தை கல்வியில் முன்னேற்றமடையச் செய்யவேண்டும். வீடியோ கான்ஃபிரன்சிங் மூலம் ஆன்லைனில் கல்விகற்கும் நிலை நிலவிவருகின்ற சூழலில் முஸ்லிம்களுக்கு என்று எத்தனை கல்வி நிலையங்கள் இருக்கின்றன. விரல் விட்டு எண்ணக்கூடிய எண்ணிக்கையில் கல்விக்கூடங்களை நாம் வைத்திருக்கின்றோம். இந்த நிலை மாறவேண்டும். பணம்படைத்த முஸ்லிம்கள் மற்றும் முஸ்லிம் அமைப்புகள் அதற்கான வாய்புகளும் வசதிகளையும் ஏற்படுத்திட முன்வர வேண்டும். கற்றறிந்தவர்கள் அனைவரும் இதற்காகப் பாடுபடவேண்டும்.

கல்வியை மார்க்கக் கல்வி, உலகக் கல்வி என்று பிரிக்காமல் இரண்டும் இணைந்து கிடைக்கப் பாடுபடவேண்டும். கல்வியில் பின்தங்கியதால் மீடியாவில் மட்மல்லாது அரசு வேலைவாய்ப்பு, அரசியல் போன்றவற்றிலும் நாம் பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்டோம். மீடியாவில் முஸ்லிம்கள் முன்னேறுவதற்கு கல்வியில் முன்னேற்றம் மிகஅவசியம்.

இதழியல் மற்றும் மொழியியல் முன்னேற்றம்.
இதழியல்(Journalism) என்பது வாரஇதழ்கள், மாதஇதழ்கள், தினசரி செய்திப் பத்திரிக்கைகள் மற்றும் எழுத்து வடிவில் மக்களைச் சென்றடையும் அனைத்து ஊடகங்களும் இதில் அடங்கும். எந்த ஒரு உலகச் செய்தியை நாம் அறிந்துகொள்ள வேண்டுமெனினும் மாற்றார்களிடத்தில் உள்ள ஊடகங்களைத்தானே அணுகவேண்டிய சூழல் நிலவிவருகிறது. உதாரணத்திற்கு தமிழில் முஸ்லிம்களால் நடத்தப்படும் தினசரிச் செய்தித்தாள் ஏதேனும் உண்டா? வேதனைக்குரிய விஷயம் முஸ்லிம்களில் திறமையான எழுத்தாளர்கள் மிகமிகக் குறைவு. பத்திரிக்கைத் துறையில் நமது சமுதாயம் முன்னேற்றம் காணவேண்டும். கருத்துக்கள் என்னவாக இருந்தாலும் அதைச் சீரிய முறையில் எடுத்துரைக்க மொழி என்ற ஊடகம் அவசியமாகிறது. எனவே மொழியை அதன் இலக்கிய, இலக்கண அறிவோடு அறிதல் வேண்டும். ஆங்கிலம் என்பது உலகில் அதிகமானோரால் பேசப்பட்டு வரும் மொழி, எனவே அவற்றையும் நாம் கற்றறிய வேண்டும்.

பட்டப் படிப்புகளில் இதழியலும் ஒரு பிரிவு. இதில் முஸ்லிம்கள் ஆர்வம் செலுத்திப் படித்து திறமையான எழுத்தாளர்களாக மாறவேண்டும். மீடியாவில் நம் சமுதாயம் முன்னேற திறமையான எழுத்தாளர்கள் பலர் உருவாக (உருவாக்க) வேண்டும். அதன் மூலமாக கணிசமான முறையில் முஸ்லிம் சமுதாயமும், இஸ்லாமும் ஊடகங்களில் வெற்றியைக் காணும்.

தொலைக்காட்சி சேனல்கள் மற்றும் வானொலி அலைவரிசைகள்.
எந்த ஒரு செய்தியும் எழுத்துவடிவில் மக்களைச் சென்றடைவதை விட காட்சி ஊடகமான (Visual-Media) தொலைக்காட்சி சேனல்கள், திரைப்படங்கள், குறும்படங்கள் (Documentery - Films) போன்றவற்றின் மூலமாக விரைவாகச் சென்றடைந்துவிடும். காட்சியோடு செய்திகள் மக்களைச் சென்றடையும் போது மக்கள் மனதில் அச்செய்திகள் பதியும். இவ்வகையான ஊடகங்களில் முஸ்லிம்கள் இப்போதுதான் தலைகாட்டியுள்ளார்கள். உலக அளவில் முஸ்லிம்களுக்கு சில அரபி சேனல்கள் இருக்கின்றன. ஆங்கிலத்தில் முஸ்லிம்களுக்கு என்று ஒரு சேனல் உண்டா எனில் இல்லை.

பி.பி.ஸி மற்றும் சி.என்.என் போன்ற முஸ்லிம்களுக்கு எதிரான ஊடகங்கள் உலக அரங்கில் அதிகமானோரால் முஸ்லிம்கள் உட்பட கவரப்படுவதற்குக் காரணம் அவை அறிவியல் செய்திகளை ஆய்வுசெய்து தருகின்றன, மருத்துவச் செய்திகள் மற்றும் கல்வி, வேலைவாய்ப்பு போன்றவைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு செய்வதேயாகும்.

இத்தனை காலம் கழிந்து டாண் மியூசிக் சேனலில் தமிழில் இஸ்லாமியர்களின் நிகழ்ச்சி தினமும் ஒரு மணிநேரம் ஒளிபரப்பாகின்றது என்பது வியப்புக்குரிய செய்தி. அத்தகைய சேனல்களும் முஸ்லிம்களுக்குச் சொந்தமா? எனில் அதுவும் இல்லை. ஆடல், பாடல், இசை, பொழுதுபோக்கு என்று எடுத்துக்கொண்டால் எண்ணற்ற தொலைக்காட்சி மற்றும் வானொலி அலைவரிசைகள்.

இத்தகைய ஊடகத்தை முஸ்லிம்கள் பயன்படுத்த முன்வரவேண்டும். இஸ்லாத்தை எத்திவைப்பதோடல்லாமல் முஸ்லிம் சமுதாயம் எதிர்கொண்டிருக்கும் பிரச்சனைகள், சமுதாய வளர்ச்சி, சேவை போன்ற நல்ல நோக்கங்களுக்கு இத்தகைய ஊடகங்களில் சரித்திரம் படைக்கவேண்டும். தொலைக்காட்சி, திரைப்படம், குறும்படம் (Documentery) என்று போனால் இசை, ஆடல், பாடல், கவர்ச்சி மற்றும் கமர்ஷியல் இல்லாமல் முடியுமா? என்று கேள்வியெழுப்பிக் கொண்டிருக்காமல் இஸ்லாத்தின் வட்டத்திற்குள் இருந்துகொண்டு இத்தகைய ஊடகங்களை எப்படிப் பயன்படுத்தலாம் என்பதைச் சிந்தித்துப் பயன்படுத்த முன்வர வேண்டும்.

தனிநபர் பிரச்சாரங்கள், மேடை நாடகங்கள், கருத்தரங்குகள், ஜும்மாப் பேருரைகள்.
இவையாவும் மக்களைச் சென்றடையும் ஊடகங்களே! இவற்றின் மூலமாகவும் மக்கள் சக்தியை உருவாக்கிட முடியும். நபி(ஸல்) அவர்கள் மார்க்கத்தை மட்டும் போதித்துச் சென்றுவிடாமல் வாழ்க்கைக்குத் தேவையான எல்லா அம்சங்களும் கற்றுக் கொடுத்துச் சென்றுள்ளார்கள். காலத்திற்குத் தகுந்தாற்போல் அவர்கள் வெள்ளிமேடைகளில் (குத்பாப் பேருரைகள்) பிரச்சாரங்கள் செய்துள்ளார்கள். ஆனால் இன்று நம் நாடுகளில் பெருவாரியான முஸ்லிம்கள் ஒன்று குழுமக் கூடிய வெள்ளிக்கிழமை பேருரைகள் அரபி மொழியிலேயே சடங்குக்காக நடந்து வருகின்றன. நம்மில் பலரும் அதைப் பக்தியோடு கேட்டு துயில் கொண்டு செல்கிறோம். இன்றைய முஸ்லிம் சமுதாயம் எதை நோக்கிச் சென்றுகொண்டிருக்கின்றது, சமுதாயத்தில் படர்ந்துவிட்ட களங்கங்கள் என்ன? மார்க்கத்தை எவ்வாறு நிலைநாட்டலாம் என உணர்ந்து இந்த குத்பாப் பேருரைகள் அமைந்தால் அதுவும் மீடியாவில் மகத்தான வெற்றிதான்.

பொழுதுபோக்கிற்காக எத்தனையோ அம்சங்கள் வந்துவிட்டன. ஆனால் பொழுதுபோக்கிலும் உபயோகமுள்ள ஒரு கருத்தை வலியுறுத்தி பிரச்சாரங்கள், மேடை நாடகங்கள், கருத்தரங்குகள் நடத்துதல் அவசியம். இவ்வாறான நிகழ்ச்சிகள் மூலமாகவும் மீடியாவின் கவனத்தை திசைதிருப்ப முடியும். மார்க்கப் பிரச்சாரங்கள், தொழுகை, இபாதத் போன்றவற்றிற்கு மட்டும் முஸ்லிம்கள் ஒன்று திரளக்கூடியவர்களாக இருந்த நிலை மாறி பாபர் மசூதி பிரச்சனை, வாழ்வுரிமை மாநாடுகள், அரசியல் மேடைகள், மதமாற்ற தடைச் சட்டம், லாட்டரி ஒழிப்பு போன்ற பிரச்சனைகளுக்கும் தற்போது ஒன்று குழுமக் கூடியவர்களாக இருக்கின்றார்கள். எனினும் மீடியாவில் நாம் சொல்லக்கூடிய அளவில் முன்னேற்றம் கண்டுவிடவில்லை. எனவே நவீன மீடியாக்களைப் பயன்படுத்தி காலத்திற்கேற்றாற் போல செய்திகளை மக்களுக்குக் கொண்டுசெல்ல வேண்டும்.

இணையம் (Internet).
இணையம் என்பது உலகத்தின் ஒட்டுமொத்த ஊடகங்களையும் ஒரு குடையின் கீழ் கொண்டுவந்து இணைத்துவிடுகிறது. டாட்காம், வெப்காம், பிளாக், இ-மெயில், சாட்டிங், டேட்டிங், ஃபாரம், ஆன்லைன் என்று உலக மீடியாக்களில் இணையம் இமாலய முன்னேற்றம் அடைந்து கொண்டிருக்கின்றது. நம் சமுதாய மக்களோ இன்னும் கம்ப்யூட்டர் என்றால் என்ன? சாஃப்ட்வேர் என்றால் என்ன? ஹார்ட் வேர் என்றால் என்ன? என்று கணினி பற்றிய உபயோகம் குறித்து அறியாமலே இருக்கிறார்கள். கணிப்பொறி மற்றும் இணையத்தின் பயன்பாடுகளைக் கொண்டு முஸ்லிம்கள் ஊடகங்களை வலுவடையச் செய்யலாம். கணினி மற்றும் இணையத்தின் எல்லாப் பயன்பாடுகளும் தமிழிலேயே அறிந்துகொள்ள மென்பெருட்கள் வந்துவிட்டன. கம்ப்யூட்டர் மற்றும் இண்டர்நெட் என்ற ஊடகங்களின் பயன்பாடுகள் அறிந்து முஸ்லிம்கள் இவ்வாறான மீடியாக்களைப் பயன்படுத்த முன்வருதல் வேண்டும்.

ஒற்றுமை என்ற பண்பு மீடியாவின் வளர்ச்சிக்கு வழி வகுக்கும்.
முஸ்லிம்கள் மீடியாவில் தாக்குப்பிடித்து மேற்கண்ட வழிகளில் முன்னேற ஒற்றுமை என்ற பண்பை முன்நிறுத்தியாக வேண்டும். உலக அளவில் இருக்கும் 50க்கும் மேற்பட்ட முஸ்லிம் நாடுகள் ஒருமித்த கருத்தில் இருந்தால் அமெரிக்காவை எதிர்கொள்ள முடியாதா? ஊரளவில் முஸ்லிம்கள் ஜமாஅத்களாகவும், அமைப்புகளாகவும் பிரியாமல் ஒன்றுபட்டால் பெரிய மக்கள் சக்தியை உருவாக்க முடியாதா? கண்டிப்பாக முடியும். அப்போதுதான் மீடியாவின் மூலமாக சிறந்த செயல் திட்டங்கள் உருவாக்கமுடியும். பொருளாதாரத்தைச் சரிகட்டி நடைமுறைப்படுத்தவும் முடியும். இதை முஸ்லிம் சமுதாய மக்கள் உணர்ந்து செயல்படவேண்டும்.

எந்த ஒரு சமுதாயமும் தன் உள்ளத்திலுள்ள (போக்குகளை) மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களுக்கு வழங்கிய அருட்கொடைகளை மாற்றிவிடுவதில்லை - நிச்சயமாக அல்லாஹ் (எல்லாவற்றையும்) செவியுறுபவனாகவும், (யாவற்றையும்) நன்கறிபவனாகவும் இருக்கின்றான். (அல்-குர்ஆன் 8:53)

எல்லாம் வல்ல அல்லாஹ் தூய இஸ்லாத்தையும், அதைப் பின்பற்றும் முஸ்லிம்களையும் மீடியாவில் மட்டுமல்லாது எல்லாத் துறைகளிலும் முன்னேற்றம் அடையச் செய்வானாக. – ஆமீன்.

தொடர்ந்து படிக்க கீழுள்ள தொடுப்பை கிளிக் செய்க

http://www.ottrumai .net/TArticles/ 32-MediaNMuslims .htm

No comments: