ஏகஇறைவனின் திருப்பெரால்...
فَبِمَا رَحْمَةٍ مِّنَ اللّهِ لِنتَ لَهُمْ وَلَوْ كُنتَ فَظًّا غَلِيظَ الْقَلْبِ لاَنفَضُّواْ مِنْ حَوْلِكَ فَاعْفُ عَنْهُمْ وَاسْتَغْفِرْ لَهُمْ وَشَاوِرْهُمْ فِي الأَمْرِ فَإِذَا عَزَمْتَ فَتَوَكَّلْ عَلَى اللّهِ إِنَّ اللّهَ يُحِبُّ الْمُتَوَكِّلِينَ
3:159. (முஹம்மதே!) அல்லாஹ்வின் அருள் காரணமாகவே அவர்களிடம் நளினமாக நீர் நடந்து கொள்கிறீர். முரட்டுத்தனம் உடையவராகவும் கடின உள்ளம் உடையவராகவும் நீர் இருந்திருந்தால் அவர்கள் உம்மை விட்டு ஓடியிருப்பார்கள். அவர்களை மன்னிப்பீராக! அவர்களுக்காகப் பாவமன்னிப்புத் தேடுவீராக! காரியங்களில் அவர்களுடன் ஆலோசனை செய்வீராக! உறுதியான முடிவு செய்து விட்டால் அல்லாஹ்வையே சார்ந்திருப்பீராக! தன்னையே சார்ந்திருப்போரை அல்லாஹ் நேசிக்கிறான்.
கோபத்திலும் நிதானம் தவறாமை.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
கடந்தக் கட்டுரையில் யூனுஸ்(அலை)அவர்களுக்கு ஏற்பட்ட கோபத்தின் மூலம் நமக்கும் உண்டானப் படிப்பினைகளைப் பார்த்தோம்.
அருளாலன் அல்லாஹ்வின் அருள் மட்டும் யூனுஸ்(அலை)அவர்களின் மீது அருளப்பட்டிருக்க வில்லை என்றால் அவர்களுடைய நிலை இவ்வுலகிலும் மறுஉலகிலும் படுதோல்வி அடைந்திருக்கும்.
உலக மக்களுக்கு படிப்பினையாக்குவதற்காக கடைசி நேரத்தில் யூனுஸ்(அலை) அவர்களை காப்பாற்றி தவ்பா செய்ய வைத்து அதன் பின்னர் அவர்களுக்கு உதவியும் செய்து அதற்கு முந்தைய நபித்துவப் பொறுப்பையும் வழங்கி கண்ணியப் படுத்தினான்.
ஒரு வருடமோ அல்லது ஆறு மாதமோ விலக்கி வைத்து விட்டு அதன் பிறகு நபித்துவப் பொறுப்பை ஒப்படைக்கலாம் என்று நினைக்காமல் மன்னிக்கப்பட்ட அடுத்த கனமே முந்தைய நபித்துவப் பொறுப்பை ஒப்படைத்து லட்சத்திற்கு மேற்பட்ட மக்களுக்கு மீண்டும் தூதராக நியமித்தான் இதனால் தான் அவனை அளவற்ற அருலாளன் நிகரற்ற அன்புடையோன் என்று அழைக்கின்றோம் அவனுடைய அன்புக்கும், அருளுக்கும் எல்லை இல்லை.
மேற்காணும் சம்பவத்தைக் கூறி நீங்களும் அவரைப்போன்று ஆகிவிடாதீர்கள் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்களை அல்லாஹ் எச்சரிக்கை செய்து கொண்டே இருந்ததுடன் அவர்கள் மீதும் அல்லாஹ் தன் அருளை இறக்கி தொடர்ந்து பாதுகாத்து வந்தான்.
அல்லாஹ்வின் அருள் அண்ணல் நபி(ஸல்)அவர்களை பேராபத்துகளிலிருந்து மட்டும் பாதுகாத்ததுடன் நில்லாமல் பெரும் கோபங்களிலிருந்தும் தடுத்து வந்தது அதனால் அண்ணல் அவர்கள் மிருதுவானத் தன்மை உடையவர்களாக இருந்தார்கள்.
அவர்களுடன் இணைந்திருந்த மக்களிடம் அன்பு செலுத்தி அரவனைத்துக் கொண்டார்கள், அவர்கள் செய்யும் சிறு தவறுகளுக்காக பெரிய அளவில் பிடித்து தண்டனைக் கொடுக்காமல் அவற்றை அலச்சியம் செய்தார்கள், அவர்கள் விளங்கிக் கொள்ளும் விதம் அவர்களுடைய தவறுகளை மிக இலகுவாக எடுத்துக் கூறினார்கள் அந்த விளக்க உரைகள் அவர்களை மீண்டும் அந்த தவறுகளை செய்ய விடாமல் அரணான நின்று கொண்டது.
யார் மீதும் அண்ணல் நபி(ஸல்) அவர்கள் கோபம் கொண்டது கிடையாது, கடு கடுத்தது கிடையாது, முகத்தைத் திருப்பிக் கொண்டது கிடையாது. உலக ரட்சகன் அல்லாஹ் தன் அருளால் அவர்களை சூழ்ந்து கொண்டதே இதற்கு காரணமாகும்.
3:159. (முஹம்மதே!) அல்லாஹ்வின் அருள் காரணமாகவே அவர்களிடம் நளினமாக நீர் நடந்து கொள்கிறீர். முரட்டுத்தனம் உடையவராகவும் கடின உள்ளம் உடையவராகவும் நீர் இருந்திருந்தால் அவர்கள் உம்மை விட்டு ஓடியிருப்பார்கள். அவர்களை மன்னிப்பீராக! அவர்களுக்காகப் பாவமன்னிப்புத் தேடுவீராக! காரியங்களில் அவர்களுடன் ஆலோசனை செய்வீராக! உறுதியான முடிவு செய்து விட்டால் அல்லாஹ்வையே சார்ந்திருப்பீராக! தன்னையே சார்ந்திருப்போரை அல்லாஹ் நேசிக்கிறான்.
இப்படிப்பட்ட ஒரு கட்டமைப்பை பார்த்துக்கொண்டு ஷைத்தான் சும்மா இருப்பானா ? அவனால் சும்மா இருக்க முடியுமா ?
இந்த கட்டமைப்பை எப்படி சிதைப்பது ?
இவர்களை எப்படி பாவத்தாளிகளாக ஆக்குவது ?
இவர்கள்
- இணைவைக்க மாட்டார்கள்,
- பொய் சொல்ல மாட்டார்கள்,
- புறம் பேச மாட்டார்கள்,
- கொலை செய்ய மாட்டார்கள்,
- கொள்ளை அடிக்க மாட்டார்கள்,
- விபச்சாரம் செய்ய மாட்டார்கள்,
- கொடிய வட்டியில் வீழ மாட்டார்கள்.
அதனால் ஆதம், ஹவ்வா(அலை) அவர்களை மடக்கியதுப் போன்றே இவர்களையும் மடக்குவது என்ற முடிவுக்கு வந்து செல்வந்தர்களும், உயர்ந்த குலத்தவர்களுமாகிய சிலருடைய சிந்தனையில் இஸ்லாம் சரி தான் ஆனால் முஹம்மதுடன் இணைந்திருக்கும் ஆட்கள் நமக்கு நிகரானவர்களாக இல்லை அவர்களுக்கும், நமக்கும் மத்தியில் சிறிது ஏற்றத் தாழ்வை முஹம்மது ஏற்படுத்தினால் இஸ்லாத்தில் இணைவதில் நமக்கு ஆட்சேபனை இருக்காது என்றுத் தூண்டுகிறான்.
முஹம்மது(ஸல்)அவர்கள் அவர்களின் சபைக்கு அழைக்கப்பட்டு பேச்சு வார்த்தையும் நடைபெறுகிறது அவ்வேளை அண்ணல் அவர்களின் தோழர்களில் ஒருவரான கண் தெரியாத அப்துல்லாஹ் இப்னு மக்தூம் (ரலி) அவர்கள் அவ்விடத்தைக் கடக்க நேரிடுகிறது அந்த தோழருடைய கால்கள் அண்ணல் அவர்களின் குரலைக்கேட்டதும் அங்கிருந்து நகர மறுத்து விடுகிறது.
நெஞ்சில் நிறைந்த நபியின் உருவத்தை கண்களால் பார்க்க முடியவில்லை என்றாலும் அவர்களின் குரலை செவிகளால் கேட்டு குதூகலமடையும் கண் தெரியாத தோழர்கள் பலர் அன்றாடம் அண்ணல் அவர்களை சூழ்ந்து கொள்வது அக்கால வழக்கம்.
அதனால் அல்லாஹ்வின் தூதர் அவர்களே உங்கள் மீது அல்லாஹ்வின் சாந்தி உண்டாகட்டும் என்ற ஸலாமை உரக்கக் கூறுகிறார் அவரை அவ்விடத்தில் கண்டதும் விவகாரமே இது தான் என்பதால் இந்த இடத்தில் இவர் வந்து விட்டாரே என்று அண்ணல் அவர்களுக்கு கோபம் ஏற்படுகிறது முகத்தை சுளிக்கிறார்கள் அவர்கள் மீது கடு கடுக்க ஆரம்பித்து விட்டார்கள்.
அந்த ஆருயிர் தோழர்களை அண்ணல் அவர்கள் காணவில்லை என்றாலும், அன்பே உருவான அண்ணல் அவர்களை அந்த ஆருயிர் தோழர்கள் காணவில்லை என்றாலும் அந்தப் பொழுது அவர்களை விட்டு மறைவது கடினமாக இருக்கும் அப்படிப்பட்டப் பாசம் அது, நட்புக்கு இலக்கனம் வகுத்தளித்த தோழமை அது.
அண்ணல் அவர்களுக்கு முந்தைய தீர்க்கதரிசிகள், மஹான்கள் எல்லாம் தங்களைச் சுற்றி இருந்தவர்களை சீடர்களாக ஆக்கி வைத்திருந்தனர் அண்ணல் அவர்கள் மட்டும் விதி விலக்காக தங்களுடன் இணைந்திருந்தவர்களை தோழர்கள் என்ற அந்தஸ்த்தை வழங்கி சிறிதளவும் இடைவெளி இல்லாத நெருக்கத்தை ஏற்படுத்தினார்கள்.
சகோதரத்துவத்திற்காகவும், சமத்துவத்திற்காகவும் எழுப்பபட்ட இஸ்லாம் எனும் கோட்டையை சரிப்பதற்கான ஷைத்தானின் சூழ்ச்சியை அல்லாஹ் அறிந்துகொண்டு கண் தெரியாத தோழர் மீது அண்ணல் அவர்கள் கோபம் கொண்டதற்காக அவர்களை அல்லாஹ் கண்டிக்கிறான்.
ஆரம்ப காலத்திலேயே மதீனாவுக்கு ஹிஜ்ரத் செய்தவர்களில் அப்துல்லாஹ் இப்னு உம்மு மக்தூத்(ரலி)அவர்கள் முதன்மையானவர்கள் அத்துடன் அல்லாஹ்வின் புனித சொற்களாகிய திருமறைக்குர்ஆனை உள்ளத்தில் பூட்டி வைக்காமல் அதை பலருக்கும் எத்திவைப்பதில் மதீனாவில் இரவு பகலாக பாடுபட்டவர்.
நபித்தோழர்களில் (நாடு துறந்து மதீனாவிற்கு 'ஹிஜ்ரத்' செய்து) எங்களிடம் முதலில் வந்தவர்கள் 'முஸ்அப் இப்னு உமைர்'(ரலி) அவர்களும், 'இப்னு உம்மி மக்தூம்'(ரலி) அவர்களும் தாம். அவர்களிருவரும் (மதீனாவாசிகளான) எங்களுக்குக் குர்ஆனைக் கற்றுத் தந்தார்கள். பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார். நூல்: புகாரி 4941.
இப்படிப்பட்ட அல்லாஹ்வின் திருப்பொருத்தத்திற்குரிய ஒருவர் அலச்சியம் செய்யப்ட்டால் அல்லாஹ் பார்த்துக்கொண்டிருப்பானா ? உடனே திருவசனத்தை இறக்கி அவர் அலச்சியம் செய்யப்படுவதை கண்டித்து கண்ணியப்படுத்த வைத்தான்.
இது முஹம்மது(ஸல்) அவர்களுக்கும் நன்றாகத் தெரியும் ஆனாலும் கோபம் வந்து விட்டதால் அது மறக்கடிக்கப்பட்டு விட்டது. கோபம் கண்ணை மறைத்து விடும் என்று கூறுவது அனைவருக்குமே பொருந்தி விடுவதற்கு இதுவும் சான்றாகும்.
செல்வந்தர்களின் கோரிக்கையை ஏற்று ஒப்பந்தம் செய்யும் நோக்கில் அண்ணல் அவர்கள் அங்கு சென்றிருக்க மாட்டார்கள் மாறாக விளக்கமளித்து தூய இஸ்லாத்தின் எந்த கொள்கையையும் விட்டுக் கொடுக்காமல் பேசி தஃவா செய்து இஸ்லாத்திற்குள் எடுப்பதற்கே சென்றிருப்பார்கள்.
ஆனாலும் அவர்களுடனான ஆலோசனையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது அவ்விடத்தை விட்டு அப்துல்லாஹ் இப்னு உம்மு மக்தூம்(ரலி) அவர்கள்; நகராத காரணத்தால் அந்த சிறு இடைவெளியில் ஷைத்தான் அண்ணல் அவர்களுக்கு கோபத்தை விதைத்து விட்டான்.
அண்ணல் அவர்களின் கோபம் நீடித்த நிலையில் அப்துல்லாஹ் இப்னு உம்மு மக்தூத்(ரலி) அவர்கள் அலச்சியம் செய்த நிலையில் இந்த பெருங் கூட்டம் இஸ்லாத்திற்குள் வரவேண்டிய அவசியமில்லை இது ஷைத்தானின் முயற்சியால் சமத்துவத்திற்கு சாவு மணி அடிக்கும் வேலை என்பதை ஷைத்தானின் மறைவான சூழ்ச்சியை அறிந்த அல்லாஹ் ரப்புல் ஆலமீன் ஷைத்தானின் முயற்சியை முளையிலேயே கிள்ளி எறிந்து சமத்துவத்தை மேலோங்க செய்து விடுகிறான்.
இவர் அலச்சியம் செய்யப்பட்டுத்தான் அவர்கள் உள்ளே வர வேண்டும் என்றால் அவர்களை விட உள்ளம் இறைநம்பிக்கையால் நிறைந்திருக்கும் பிறரால் இழிவாக கருதப்பட்ட இந்த கண் தெரியாதவர் மேல் என்று நபியிடம் கூறி நீதியை நிலை நாட்டினான் நீதியாளன் அல்லாஹ்.
80: 5, 6. யார் அலட்சியம் செய்கிறானோ அவனிடம் வலியச் செல்கிறீர்.
80: 7. அவன் பரிசுத்தமாக ஆகாவிட்டால் உம் மீது ஏதும் இல்லை.
80: 8, 9, 10. (இறைவனை) அஞ்சி உம்மிடம் யார் ஓடி வருகிறாரோ அவரை அலட்சியம் செய்கிறீர்.
அதன் பிறகு அண்ணல் அவர்கள் அவர்களுடைய வாழ்நாளிலும் அதுப்போன்று யாரிடமும் கோபம் கொண்டு கடு கடுத்ததேக் கிடையாது.
நிதானம் இழக்க வில்லை
அமைதியே உருவான அண்ணல் நபி(ஸல்) அவர்களுக்கு கோபம் வந்தது என்றதும் அது எப்படிப்பட்டக் கோபமாக இருந்திருக்கும் ? அங்கு என்ன நடந்திருக்கும் ? என்ன மாதிரி திட்டி இருப்பார்கள் ? என்ற எண்ணம் பலருக்கும் ஏற்படலாம்.
அண்ணல் அவர்களின் முகம் தான் கோபத்தால் சிவந்ததே தவிர வாய் வார்த்தைகளைக் கொட்ட வில்லை. கோபத்திலும் கூட நிதானம் காத்தது அண்ணல் அவர்களைப் போன்று உலகில் எவரையும் அன்றும், இன்றும், என்றும் எவராலும் கோடிட்டுக் காட்டவே முடியாது.
அருள் அகற்றப்ட்டவர்கள்
கோபம் யாரையும் விட்டு வைக்காது அது யாரை ஆக்ரமித்து விட்டதோ விடை பெறும் பொழுது பெரிதாக இல்லை என்றாலும் சிறிய அளவிலேனும் பாதிப்பை ஏற்படுத்தாமல் விலகிச் செல்லாது யார் மீது அல்லாஹ்வின் அருள் உள்ளதோ அவர்களைத் தவிர.
யாருடைய உச்சந் தலையில் கோபம் குடி கொண்டு கடைசிவரை இறங்க வில்லையோ அவருடைய உச்சி முடி ஷைத்தானின் கையில் இருக்கிறது என்பதாக விளங்கிக் கொண்டு துஷ்டனை கண்டால் தூர விலகிக் கொள்வது போல் விலகி கொள்ள வேண்டும்.
அவனருடைய உச்சி முடியை பிடித்துக்கொண்டு ஷைத்தான் அவரை வழி நடத்துவான் அவரிடமிருந்து அல்லாஹ்வின் அருள் அகற்றப்பட்டு விடும் அவன் ஷைத்தானின் அடிமையாகி விடுவான்.
அல்லாஹ்வின் அருளைப் பெற்ற நன்மக்களாக நாம் நம்மை ஆக்கிக் கொண்டால் மட்டுமே கோபம் அதிகம் வராது வந்தாலும் பாதிப்பை ஏற்படுத்தாது பாதிப்பை ஏற்படுத்துவதற்கு முன் அல்லாஹ் நம்மை அதிலிருந்து மீட்டெடுத்து விடுவான்.
அல்லாஹ்வின் அருளைப் பெற்ற நன் மக்களாக வல்ல அல்லாஹ் நம் அனைவரையும் ஆக்கி அருள் புரிவானாக!
கோபம் ஷைத்தானின் தூண்டுதல் தான் என்பதை பற்றியும், அதன் கொடிய விளைவுகளைப் பற்றியும் அல்லாஹ் நாடினால் இன்னும் எழுதுவோம்.
وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
3:104. நன்மையை ஏவி தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன் HS
No comments:
Post a Comment