Monday, August 30, 2010

குரானின் இலக்கிய ஆச்சர்யங்களில் இன்னும் சில உங்கள் பார்வைக்காக...!

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...

உங்கள் அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின்

குரானின் இலக்கிய ஆச்சர்யங்களில் இன்னும் சில உங்கள் பார்வைக்காக...இன்ஷா அல்லாஹ்...



2. குரான் தன்னை எதிர்ப்பவர்களுக்கு பல சவால்களை விடுகிறது என்று நாம் அறிந்திருக்கிறோம். அதில் முஸ்லிம்களால் அதிகம் உபயோகப்படுத்தப்படும் ஒரு வசனம்...

افلا يتدبرون القران ولو كان من عند غير الله لوجدوا فيه اختلافا كثيرا
Afala yatadabbaroona alqur-ana walaw kana min AAindi ghayri Allahi lawajadoo feehi ikhtilafan katheeran

"அவர்கள் இந்த குர்ஆனை கவனமாக சிந்திக்க வேண்டாமா, அல்லாஹ் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால், இதில் ஏராளமான முரண்பாடுகளை நிச்சயமாக அவர்கள் கண்டிருப்பார்கள்" (திருக்குர்ஆன் 4 : 82)

"Do they not then consider the Quran carefully? Had it been from other than Allah, they would surely have found therein much contradictions." (Noble Qur'an 4:82)

இங்கே "முரண்பாடுகளை (contradictions)" என்ற சொல்லுக்கு அரபியில் "இக்ஹ்டிலாபான் (ikhtilafan)" என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது, இந்த இக்ஹ்டிலாபான் என்ற வார்த்தை குரான் முழுவதிலும் இந்த ஒரு இடத்தில் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

அதாவது இந்த வார்த்தை குரானில் வேறு எங்கும் திரும்ப வரவில்லை. அந்த ஒரு இடத்தில மட்டுமே, அந்த ஒரு உச்சரிப்பில். சுபானல்லாஹ்....

3. அது போல நாம் நன்கு அறிந்த ஒரு சூரா, சூரத்துல் இக்லாஸ். அந்த சூராவின் முதல் ஆயத் பின்வருமாறு இருக்கும்...

قل هو الله احد - Qul huwa Allahu ahadun
"நீர் கூறுவீராக அல்லாஹ் அவன் ஒருவனே" (குரான் 112:1)
"say `He is ALLAH, the One!" (Holu Qur'an 112:1)
இங்கு "ஒருவனே (the one)" என்ற சொல்லுக்கு "அஹத் (ahadh)" என்ற வார்த்தை உபயோக படுத்தபட்டிருக்கிறது. இந்த ஒரு வார்த்தையும் அந்த ஒரு வடிவத்தில் இந்த ஒரு சூராவில் மட்டுமே வருகிறது, குர்ஆனில் வேறு எங்கும் திரும்ப உபயோகப்படுத்தப் படவில்லை.

அதாவது இறைவன் தன்னை ஒருவனே என்று சொல்லுவதற்கு உபயோகப்படுத்திய வார்த்தை, அந்த ஒரு வடிவத்தில் முழு குரானிலும் ஒரு சூராவில் மட்டுமே வருகிறது. சுபானல்லாஹ்...



4. குர்ஆனின் இரண்டாவது சூரா, சூரத்துல் பகரா. இந்த சூராவின் மொத்த வசனங்கள் 286. இந்த சூராவில் ஒரு இடத்தில் கீழ்க்கண்ட வசனம் வருகிறது.

"இதேமுறையில் நாம் உங்களை நடுநிலை சமுதாயமாக ஆக்கிஉள்ளோம் "
"Thus have we made you a middle nation, to be witnesses against men, and that the Apostle may be a witness against you"

"உங்களை நடுநிலை சமுதாயமாக ஆக்கிஉள்ளோம்" என்ற இந்த வசனம் மிச்சரியாக அந்த சூராவின் நடுவிலே வருகிறது, அதாவது 143 வது வசனம் தான் இது.

இங்கு ஒன்றை நாம் கூர்ந்து கவனிக்க வேண்டும், குரானின் சூராக்களின் ஆயத்துக்கள் நாம் இப்போது படிப்பது போல வரிசையாக அருளப்பட்டதல்ல, அங்கொன்றும் இங்கொன்றுமாக இறக்கியருள பட்டது, சூராவில் எந்த வசனம் எங்கு வரவேண்டும் என்பதெல்லாம் நாயகம் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலின்படி நடந்த ஒன்று. அதுபோல வசனங்களுக்கு எண்களிடும் முறையும் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் இல்லை. பிறகுதான் ஏற்படுத்தப்பட்டது.

ஆக மாறி மாறி அருளப்பட்ட வசனங்களிலும் இந்த "நடுநிலை" வசனம் சரியாக அந்த சூராவின் நடுவிலே வருகிறது.

5. குரான் அருளப்பட்ட சமயம், நான் ஏற்கனவே கூறியது போல் அரபி மொழி அதன் உச்சத்தில் இருந்த நேரம். அப்பொழுது அரபி மொழி இலக்கணம் மூன்றாக அறியப்பட்டிருந்தது,

a. கவிதைநடை (poetry), அரபியில் "பிஹார்" எனப்படும்.
b. உரைநடை (common speech), அரபியில் "முர்ஸல்" எனப்படும்.
c. கவிதையும் உரையும் சேர்த்த நடை (combination of both poetry and common speech), அரபியில் "சாஜ்" எனப்படும்.

அரேபிய மக்களோ அல்லது இலக்கியவாதிகளோ ஒன்றை சொல்ல அல்லது எழுத நினைத்தால், அது மேற்கூறிய ஒன்றில் அமைந்து விடும்.
ஆனால் குரானை பார்த்து இந்த அரேபிய இலக்கியவாதிகள் அதிர்ந்ததற்க்கு மற்றுமொரு காரணம் குரானின் வசனங்கள் மேற்கூறிய எந்த நடையிலும் இல்லை என்பதுதான். குரானின் நடை அவர்கள் இதுவரை கண்டிராதது, கற்பனை செய்ய முடியாதது.
சாதாரண மக்களுக்கோ, அந்த வசனங்களின் நெஞ்சை ஊடுருவச்செய்யும் பொருளும், அந்த பொருளை தாங்கி வந்த சொற்களின் அசாதாரண நடையும், அந்த சொற்கள் உச்சரிக்கப்பட்ட விதமும் மனதை கொள்ளைக்கொண்டன.
இன்று வரை குரான் போன்றை ஒன்றை எவராலும் உருவாக்க முடியாததற்கு இதுவும் ஒரு காரணம்.
குரான் அருளப்பட்ட நாளிலிருந்து இன்று வரை முஸ்லிம்கள் அதிசயமாக பார்ப்பது தாஜ் மஹாலையோ பிரமீடைய்யோ அல்லது வேறொன்றையோ இல்லை, குரானைத்தான். நம்முடைய பலமும் அதுதான்.
அன்றும் சரி இன்றும் சரி குர்ஆன் ஆச்சர்யங்கள் அளிப்பதில் தவறியதில்லை, ஆனால் இதையெல்லாம் ஆராயாத, காதில் போட்டுக்கொள்ளாத சிலர் இருப்பதுதான் ஆச்சர்யம்.
"அவர்கள் இந்த குர்ஆனை கவனமாக சிந்திக்க வேண்டாமா, அல்லாஹ் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால், இதில் ஏராளமான முரண்பாடுகளை நிச்சயமாக அவர்கள் கண்டிருப்பார்கள்" (திருக்குர்ஆன் 4 : 82)

இறைவனே எல்லாம் அறிந்தவன்..
இறைவன் நம் அனைவருக்கும் நல்வழி காட்டுவானாக...ஆமின்...
My sincere thanks to:
1. Br.Nouman Ali Khan , founder and CEO of Bayyinah Institute.
2. Br.Eddie of thedeenshowdotcom.
3. Dr.Sabeel Ahmed, Director of Outreach, Gainpeacedotcom, ICNA
4. Dr.Lawrence Brown, Canadian Dawah Association.
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...
உங்கள் அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுதாக..

குர்ஆன் அருளப்பட்ட காலத்திலிருந்து இன்று வரை அது மிக ஆழமான ஆராய்ச்சிக்கு உட்படுத்த பட்டிருக்கிறது. அறிவியல், இலக்கியம் என பல பிரிவுகளில் அது ஆராயப்பட்டிருக்கிறது. உலகில் அதிகம் ஆராயப்பட்ட புத்தகங்களில் குரானும் ஒன்று.
குரானின் இலக்கிய (literary miracles) ஆச்சர்யங்களை இந்த பதிவில் சிறிது பார்க்கவிருக்கிறோம்.



1. குரானை எந்த மொழிகளிலும் முழுமையாக மொழிப்பெயர்க்க முடியாது என சிலர் சொல்லி கேட்டிருப்பீர்கள். அது முற்றிலும் உண்மைதான். நீங்கள் அரபி தெரியாமல் தமிழ் மொழிப்பெயர்ப்பை மட்டுமே படிப்பவரா? அப்படியெனில் நீங்கள் குரானின் அழகை மிக சொற்பமே உணர்கிறீர்கள்.
ஏன்? இந்த பதிவின் முடிவில் அறிந்துக்கொள்வீர்கள்.
குர்ஆன் அருளப்பட்ட சமயம், மக்கா நகரம் அரேபிய ஷேக்ஸ்பியர்கள் நிரம்பி இருந்த நேரம். அரபி மொழி புகழின் உச்சத்தில் இருந்த தருணம். அப்படிப்பட்ட சமயத்தில் தான் குரான் இறங்கி அரேபிய இலக்கியவாதிகளை ஆச்சர்யத்தில் அதிர்ச்சி அடையச்செய்தது. தாங்கள் இதுவரை நினைத்திராத எழுத்து நடை. கொள்ளை அழகான வார்த்தைகள். நெஞ்சை ஊடுருவ செய்யும் பொருள்கள்.
அரேபிய புலவர்களால் நம்ப முடியவில்லை, நேற்று வரை நம்முடன் இருந்த எழுதப் படிக்க தெரியாத முஹம்மதா இந்த அற்புத வாக்கியங்களை கற்பனை செய்தார்? நினைத்துக்கூட பார்க்க முடியாத அதிசயம் இது. வேறு வழியில்லாமல் நம்பினார்கள், ஏனென்றால் இறைவனிடத்தில் இருந்து வந்ததென நம்புவது இன்னும் கடினமானது. அதற்கு முஹம்மது (ஸல்) அவர்களின் கற்பனை வளத்தை பாராட்டுவது எவ்வளவோ மேல்.
நபிகள் நாயகம் (ஸல்) எவ்வளவோ எடுத்து கூறியும் இது இறைவனின் வார்த்தைகள் என்பதை நம்ப மறுத்து விட்டார்கள். குரான் அடுத்த அதிர்ச்சியை கொடுத்தது.
நீங்கள் உண்மையாளர்களாய் இருந்தால் இது போன்ற ஒரு புத்தகத்தை, அல்லது பத்து சூராக்களை அல்லது ஒரு சூராவையாவது கொண்டு வாருங்கள் என்று அந்த அரபு ஷேக்ஸ்பியர்களை சவாலுக்கு அழைத்தது.
இன்று வரை எந்த அரபியராலும் அல்லது அரபி தெரிந்த எவராலும் குரானின் சவாலை எதிர்க்கொள்ள முடியவில்லை.

நீங்கள் கேட்கலாம், சரி முஸ்லிம் அரபியரால் தான் குரான் போன்ற ஒன்றை உருவாக்க முடியவில்லை, ஏனென்றால் அது அவர்களது உயிர் மூச்சு, குரான் போன்ற ஒன்றை உருவாக்க அவர்கள் தயக்கம் காட்டலாம், ஆனால் வளைகுடாவில் தான் பத்து மில்லியன் அரேபிய கிருத்துவர்களும், யூதர்களும் இருக்கிறார்களே, அவர்களால் கூடவா குரானை போன்ற ஒன்றை உருவாக்க முடியவில்லை?.
மிகச்சரியான கேள்விதான். ஆனால் ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள், யாராலும் குரானின் சவாலை எதிர்க்கொள்ளமுடியாது , முறியடிக்கமுடியாது...
ஏன்?
இதற்கு ஒரு சிறிய உதாரணத்தின் மூலம் விடை சொல்லிவிடலாம்.
நாம் பல புத்தகங்களை படித்திருப்போம், புத்தகத்தின் ஆசிரியர் ஒன்றை கூறிக்கொண்டே வரும்போது நடுவில் ஒரு சொல்லுக்கு அதிக விளக்கம் தேவைப்பட்டால் அந்த சொல்லுக்கு பக்கத்தில் ஒரு எண்ணை (called superscript, eg. Hello1) குறிப்பிட்டு அந்த எண்ணுக்கான விளக்கத்தை அந்த பக்கத்தின் அடியில் (footnote) விளக்கமாக எடுத்துரைப்பார். இதை நாம் பல இடங்களில் பார்த்திருக்கலாம்.



ஆனால் குரானிலோ இது வேறு விதமாக வியப்பளிக்கும் விதத்தில் கையாளப்பட்டிருக்கிறது. எப்படியென்றால், ஒன்றை கூறிக்கொண்டே வரும்போது நடுவில் ஒரு வார்த்தைக்கோ அல்லது ஒரு சம்பவத்திற்கோ அதிக விளக்கம் தேவைப்பட்டால் அந்த வாக்கியம் அதே இடத்திலேயே நிறுத்தப்பட்டு எந்த சொல்லுக்கு விளக்கம் தேவையோ அதை விளக்க சென்றுவிடுகிறது. அந்த சொல்லை விளக்கியபிறகு மறுபடியும் பழைய இடத்திலிருந்து தொடர்கிறது.
இங்கு நீங்கள் ஒன்றை மிக கூர்மையாக கவனிக்க வேண்டும். ஒன்றை முதலில் சொல்லிவிட்டு நடுவில் வேறொன்றை விளக்கிவிட்டு மறுபடியும் பழைய இடத்திலிருந்து தொடர்கிறது.
குரானின் தனித்துவம் என்ன தெரியுமா? சொன்னால் மிரண்டு விடாதீர்கள்....
ஒன்றை சொல்லிக்கொண்டே வரும்போது அதை ஒரு சத்தத்திலும் (ஒரு வார்த்தையை உச்சரிப்பதால் ஏற்படக்கூடிய சத்தம்), நடுவில் ஒரு சொல்லுக்கு விளக்கம் தேவைப்பட்டால் அந்த விளக்கத்தை வேறொரு சத்தத்திலும், அந்த விளக்கத்தை முடித்துவிட்டு பழைய இடத்திலிருந்து தொடரும்போது மறுபடியும் பழைய சத்தத்திலும் தொடர்கிறது (Qur'an distinguishes those in an amazing audio format).
எளிமையாக சொல்லப் போனால் இரண்டு பழைய சத்தத்திற்கு நடுவில் ஒரு புது சத்தம். புது சத்தம் ஒரு சொல்லுக்கான விளக்கத்தை நடுவிலே அறியவைப்பதற்காக.
குரானை ஓதுபவரும் எளிதிலே அறிந்து கொள்வார், இது ஒரு சொல்லுக்கான விளக்கம் என்று. என்ன வியப்பின் நுனிக்கே சென்று விட்டீர்களா? இது குரானின் அதிஅழகான (The royal literature) இலக்கணத்திற்கு ஒரு சிறிய உதாரணம் தான்.

இப்போது சொல்லுங்கள், எந்த அரேபிய புலவரால் சத்தத்தை மாற்றி மாற்றி, அதே சமயம் பொருளும் மாறாமல் ஒரு முழு சூராவை கொண்டுவரமுடியும். சத்தத்தை மாற்றுவதெல்லாம் அவர்களால் நினைத்துக்கூட பார்க்க முடியாத ஒன்று. குரான் முழுக்க இந்த நடை பின்பற்றப்படுகிறது, பொருள் மாறாமல் சுவை மாறாமல். படிப்பவரை கட்டிப் போடும் வல்லமை. ஒரு சிறிய உதாரணம் தான் இது, இன்னும் பல பல காரணங்கள் இருக்கின்றன ஏன் அவர்களால் முடியவில்லையென்று. இன்ஷா அல்லாஹ் மற்றுமொரு பதிவில் பகிர்ந்து கொள்கிறேன்.
இப்போது என் முதல் கேள்விக்கு வாருங்கள், ஏன் தமிழிலோ அல்லது வேறொரு மொழியிலோ குரானை முழுமையாக மொழிப்பெயர்க்க முடியவில்லை?
விளக்கம் இந்நேரம் கண்டுபிடுத்திருப்பீர்கள், வார்த்தைகளை மொழிப்பெயர்க்கலாம் (இதுவும் குரானை பொறுத்தவரை கடினந்தான்), சத்தங்களை?
Qur'an is the most difficult book on the face of earth to translate...
இறைவனே எல்லாம் அறிந்தவன்....
அல்லாஹ் நம் அனைவருக்கும் நேர்வழியை காட்டுவானாக...ஆமின்


இன்ஷா அல்லாஹ் தொடரும்...

Note:
My sincere thanks to Br.Nouman of Bayyinah Institute for inspiring me to write this article.

Thanks,
ஆஷிக் அஹ்மத் அ.

No comments: