Thursday, October 7, 2010

அயோத்தி : ராமருக்கா பாபருக்கா?

யார் இந்த நிர்மோஹி அகரா? (Safron Terrorism)


அயோத்தி : ராமருக்கா பாபருக்கா?

எளிமையாகச் சொல்வதானால், இது நிலத்துக்கான சண்டை. வட இந்தியாவில், ஒரு மூலையில் அமைந்திருக்கும் ஒரு துண்டு நிலம் யாருக்குச் சொந்தம்? ராமருக்கா பாபருக்கா? சபரிமலை, திருப்பதி தொடங்கி, தெருமுனை விநாயகர் கோயில் வரை, எங்கே தோண்டினாலும் சர்ச்சைகள் வெடிக்கும். இந்தக் கோயில் இருந்த இடத்தில் முன்னதாக என்ன இருந்தது? எதை இடித்து அல்லது எதை அழித்து, அல்லது எதை மறைத்து இங்கே ஒன்று புதிதாக கட்டமைக்கப்பட்டிருக்கிறது? இந்து மதக் கோயில்களுக்கு மட்டுமல்ல, பல இஸ்லாமிய, கிறிஸ்தவ வழிபாட்டு இடங்களின் பின்னாலும் இத்தகைய குழப்பங்கள் ஒளிந்துகொண்டிருக்கின்றன.

மசூதி. அதை இடித்து கோயில். அதை இடித்து தேவாலயம். அதை மாற்றி மீண்டும் ஒரு கோயில். இப்படியும் மாற்றியும், திருத்தியும், அழித்தும், மறைத்தும்தான் கடவுள்களுக்கான இருப்பிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஒவ்வொருமுறை மாற்றும்போதும், திருத்தும்போதும், அழிக்கும்போதும், இடிக்கும்போதும், தலைகள் உருண்டு விழுகின்றன. ரத்தம் சிந்தப்படுகிறது.

பாபர் மசூதி அமைந்திருந்த இடம், எங்களுக்குத்தான் சொந்தம் என்கிறது வக்ஃப் சன்னி மத்தியக் குழு. ராமர் பிறந்தது இங்கேதான், இது எங்கள் புண்ணிய பூமி என்கிறார்கள் பிஜேபி வகையரா இந்துத்துவவாதிகளால் இயக்கப்படும் இந்துக்கள். 1992 டிசம்பர் மாதம் ஈட்டியுடன் மசூதி மீது ஏறி நின்று இடித்த அதே இந்து தீவிரவாதிகள், தீர்ப்பு எப்படி வந்தாலும் அமைதியாக இருங்கள் என்று இன்று உபதேசம் செய்துகொண்டிருக்கிறார்கள்.

எந்த நிலையிலும் மசூதி தாக்கப்படாது என்று இந்திய அரசு அன்று உச்ச நீதிமன்றத்துக்கு கொடுத்த வாக்குறுதி காற்றில் பறக்கப்பட்டுவிட்டது. வரவிருக்கும் தீர்ப்பைச் சட்டப்படி மட்டுமே சந்திக்கவேண்டும், வன்முறை வேண்டாம் என்று அதே இந்திய அரசு இன்று அனைவருக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

பாபர் படையெடுத்து வந்து இந்து கோயிலை இடித்தார் என்பதற்கு எப்படிப்பட்ட ஆதாரங்கள் இருக்கின்றன என்பது தெரியவில்லை. ஆனால், கரசேவகர்களை வழிநடத்திச் சென்று அத்வானி அண்ட் கோ மசூதியை இடித்ததற்கு கண்முன் சாட்சியங்கள் இருக்கின்றன. என்றாலும், அத்வானி செய்ததைக் காட்டிலும் பாபர் மிகப் பெரிய தீங்கு இழைத்துவிட்டார் என்பதாகப் பிரசாரங்கள் பரப்பப்பட்டு வருகின்றன. மசூதி இடிக்கப்பட்டதை இனிப்பு வழங்கி அத்வானி கொண்டாடியிருக்கிறார். 'இங்கே கோயில்தான் கட்டப்படவேண்டும்!' என்று மறுதினம் ஆணவமாகப் பேட்டியும் அளித்திருக்கிறார்.

உண்மையில், அத்வானி இஸ்லாமியர்களுக்கு மட்டுமல்ல, இந்துக்களுக்குமேகூட துரோகமே இழைத்திருக்கிறார் என்பதை இந்த தெஹல்கா பேட்டி வெளிப்படுத்துகிறது.

காமன்வெல்த் விளையாட்டுகள் நடைபெறப்போகும் சமயத்தில், அயோத்தி தீர்ப்பு வெளிவருவது பலருக்குச் சங்கடத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஏதாவது பிரச்னை வந்தால், வன்முறை வெடித்தால், உலகத்தின் பார்வையில் இந்தியாவின் பிம்பம் சிதறிவிடும் என்பது அவர்கள் கவலை. அசுத்தமான கழிப்பிட வசதிகள் குறித்த புகைப்படங்கள் பிரிட்டனில் வெளிவந்தபோது, பலர் இங்கே கூனிக்குறுகிப்போனார்கள். இந்திய அரசியல்வாதிகளால் இன்னும் நாம் என்னென்ன அவமானங்களைச் சந்திக்கப்போகிறோமோ என்று தி ஹிந்து எடிட்டோரியல் தன் கவலையைப் பகிர்ந்துகொண்டது. தீர்ப்பு எப்படி வந்தாலும், இந்தியர்கள் அமைதி காத்து நம் பிம்பத்தை உலக அரங்கில் உயர்த்திப் பிடிக்கவேண்டும் என்று பலர் கடிதம் எழுதினார்கள். இது இந்தியாவின் தன்மானம் சம்பந்தப்பட்ட பிரச்னை என்பதால்.

உத்தரப் பிரதேசம் (அயோத்தி) ராமரின் பிறப்பிடம் என்பதற்கு ஆதாரங்கள் எதுவும் இல்லை. ஆனால், வறுமையின் பிறப்பிடம் என்பதற்கு பலமான ஆதாரங்கள் உள்ளன. தங்குவதற்கு இடமின்றி மக்கள் அங்கே அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். நாற்பது சதவீதம் பேர் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்வதாக அரசாங்க குறிப்பு சொல்கிறது. உண்மை எண்ணிக்கை, அதற்கும் மேலே. ஆனால், இதற்கும் இந்தியாவின் தன்மானத்துக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை.

உத்தரப் பிரதேசத்திலும் இந்தியாவின் பிற மாநிலங்களிலும் வாழும் லட்சக்கணக்கான மக்கள் பொது வழிச் சாலைகளையும் ரயில் தண்டவாளங்களையும் தங்கள் கழிப்பிடமாகப் பயன்படுத்தி வருகிறார்கள். சாலையோரங்களில் குளித்து, சாலையோரங்களில் பொங்கி, உண்டு, வாழ்ந்து, இறக்கிறார்கள். அதற்கு நாம் ஒன்றும் செய்வதற்கில்லை.

குஜராத் கலவரம் இந்தியாவின் அவமானமல்ல. அயோத்தி கலவரம் இந்தியாவின் அவமானமல்ல. குஜராத் கலவரத்துக்கும் மசூதி இடிப்புக்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்படாமல் இருப்பது இந்தியாவுக்கு அவமானத்தை ஏற்படுத்தவில்லை.

எது அவமானம்? காமன்வெல்த் விளையாட்டு ஏதாவதொரு காரணத்தால் தடைபட்டு விட்டால் அது அவமானம். அயல்நாட்டு வீரர்கள் டெல்லியைக் கண்டு முகம் சுளித்தால் அது அவமானம். அயோத்தி தீர்ப்பு வாசிக்கப்பட்டு அதன் மூலம் கலவரம் ஏற்பட்டு, அதன் மூலம் இந்தியாவின் புகழ் மங்கினால் அது அவமானம்.

தீர்ப்பையொட்டி பல்வேறு கட்சிகளில் இருந்தும் வரும் அமைதி அறிவிப்புகளுக்குப் பின்னாலுள்ள அரசியல் இதுதான். வன்முறை மீது மட்டுமே நம்பிக்கை வைத்துள்ளவர்கள், நீதி குறித்தும் அமைதி குறித்தும் கவலைப்படுவது விசித்திரமானது.

2 comments:

Unknown said...

எது அவமானம்? காமன்வெல்த் விளையாட்டு ஏதாவதொரு காரணத்தால் தடைபட்டு விட்டால் அது அவமானம். அயல்நாட்டு வீரர்கள் டெல்லியைக் கண்டு முகம் சுளித்தால் அது அவமானம். அயோத்தி தீர்ப்பு வாசிக்கப்பட்டு அதன் மூலம் கலவரம் ஏற்பட்டு, அதன் மூலம் இந்தியாவின் புகழ் மங்கினால் அது அவமானம்.
;//நான் இந்தியனாக ,இருப்பது, எனக்கு அவமானமாக உள்ளது .
இந்தியாவில் முஸ்லிமாக இருபதைவிட ,
பாகிஸ்தானில் ஹிந்துவாக ,இருந்து இருக்கலாமா என தோன்ற வைக்கின்றது
இந்த மானம் கெட்ட,மயிறு தீர்ப்பு .
இந்திய" நீதி" மன்றமா அல்லது ," கூ "மன்றமா என்று தெரியவில்லை.
தூத் தேறி.jk.

jk said...

நான் இந்தியனாக ,இருப்பது, எனக்கு அவமானமாக உள்ளது .
இந்தியாவில் முஸ்லிமாக இருபதைவிட ,
பாகிஸ்தானில் ஹிந்துவாக ,இருந்து இருக்கலாமா என தோன்ற வைக்கின்றது
இந்த மானம் கெட்ட,மயிறு தீர்ப்பு .
இந்திய" நீதி" மன்றமா அல்லது ," கூ "மன்றமா என்று தெரியவில்லை.
தூத் தேறி.jk