அல்லாஹ் யாருக்கு சொந்தம்?
மலேசியா உச்ச நீதிமன்றத்திற்கு ஒரு விசித்திரமான வழக்கு வந்தது. கிறிஸ்தவர்களும் "அல்லாஹ்" என்ற சொல்லை பாவிக்கலாமா? என்பதே அந்த வழக்கு. மலேசியாவில் முஸ்லிம் அல்லாத பிற மதத்தவர்கள் "அல்லாஹ்" என்ற சொல்லை பாவிக்க தடை இருந்தது. மலே கத்தோலிக்கர்களின் பத்திரிகையான "ஹெரால்ட்", அந்த தடையை மீறியிருந்தது. குறிப்பாக மலே மொழி பேசும் கிறிஸ்தவ சிறுபான்மையினரை பிரதிநிதித்துவப் படுத்திய அந்தப் பத்திரிகை நீதிமன்றுக்கு இழுக்கப்பட்டது.
வாதங்களை விசாரித்த நீதிபதி, அல்லாஹ் என்ற வார்த்தையை கிறிஸ்தவர்களும் பயன்படுத்தலாம் என தீர்ப்பளித்தார். இஸ்லாமிய மத அடிப்படைவாதக் குழுக்கள், தீர்ப்பை ஏற்றுக் கொள்ள மறுத்தன. "அல்லாஹ் முஸ்லிம்களுக்கே மட்டுமே சொந்தம்." என உரிமை கொண்டாடின. கோலாலம்பூர் நகரில் சில கிறிஸ்தவ தேவாலயங்கள் எரிக்கப்பட்டன. தேவாலயங்கள் மீதான வன்முறையை எதிர்ப்பதாக கூறிய மலேசிய பிரதமர், "அல்லாஹ் மீதான தடையை" ஆதரித்து பேசினார்.
அல்லாஹ் என்பது முஸ்லிம்களின் கடவுளை (மட்டும்) குறிக்கும் என்று தான், பிற மதத்தவர்கள் அப்பாவித்தனமாக நம்புகின்றார்கள். சில முஸ்லிம் பாமரர்களும், மத அடிப்படைவாதிகளும் அல்லாஹ் என்ற வார்த்தையை ஒரு முஸ்லிம் மட்டுமே உச்சரிக்க முடியும் என வாதிடுகின்றனர். இது ஒரு வகையில் "இறைவனைத் தவிர வேறெந்த இறைவனும் இல்லை" என்ற திருக் குர் ஆனின் அடிப்படைக்கு முரணானது. "இறைவன் ஒருவனே" எனில், அது உலகமாந்தர் அனைவருக்கும் பொதுவான இறைவனையே சுட்டி நிற்கும். அது போலத்தான், "அஸ்ஸலாமு அழைக்கும்" (உங்களுக்கு சமாதானம் உண்டாவதாக) என்ற அரபு சொற் தொடரையும் முஸ்லிம்கள் மட்டுமே கூற வேண்டும் என அடம் பிடிப்பவர்களைக் காணலாம்.
இஸ்லாமிய மதம் அரபு மொழியை அடிப்படையாகக் கொண்டது. திருக்குர்-ஆன் அரபு மொழியில் மட்டுமே கற்பிக்கப்படுகின்றது. (மொழிபெயர்ப்புகள் இருந்த போதிலும், இஸ்லாமிய மாணவர்கள் மூல மொழியிலான அரபிலேயே படிக்கின்றனர்.) இஸ்லாமியப் படையெடுப்புகள் ஈராக் வரையிலான மக்களை அரபு மொழி பேசுவோராக மாற்றின. இருப்பினும் ஈரானுக்கு அப்பால், அரபு மொழி மத அனுஷ்டானங்களுடன் மட்டும் நின்று விட்டது. சாதாரண மக்களின் பேச்சு மொழியாக மாறவில்லை. இருப்பினும் முஸ்லீமாக மக்கள், சில அரபுச் சொற்களை தமது பெயர்களிலும், அன்றாட பேச்சு வழக்கிலும் சேர்த்துக் கொண்டனர். அவ்வாறு தான், அல்லாஹ் என்ற அரபுச் சொல், முஸ்லிம்களின் கடவுளைக் குறிக்கும் என்ற தப்பபிப்பிராயம் தோன்றலாயிற்று.
தமிழர்கள் "கடவுள், இறைவன், ஆண்டவன்" என்று சொன்னார்கள். சமஸ்கிருதக்காரர்கள் "பகவான்" என்றார்கள். ஆங்கிலேயர்கள் "God " என்றார்கள். பிரெஞ்சுக்காரர்கள் "Dieu " என்றார்கள். அவ்வாறே அரபு மொழி பேசுவோர் "அல்லாஹ்" என்றார்கள். அரபு மொழியில் "இலாஹ்" என்ற பெயர்ச் சொல்லுடன், அல் என்ற விகுதி சேர்ந்து அல்லாஹ் என்றானது. அது இஸ்லாம் மதம் தோன்றுவதற்கு முன்பிருந்தே பாவனையில் இருந்துள்ளது. அரேபியாவில் வாழ்ந்த மக்கள், வேறெந்த பெயரில் கடவுளை அழைத்திருப்பார்கள்? ஒரு வேளை அவர்கள் கிறிஸ்தவர்களாக இருந்திருந்தால்?
சவூதி அரேபியாவில், ஜுபைல் நகருக்கு கிழக்கே உள்ள பாலைவனத்தில், உலகிலேயே மிகப் பழமையான கிறிஸ்தவ தேவாலயம் உள்ளது. அனேகமாக கி.பி. நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த அரேபிய கிறிஸ்தவர்கள் வழிபட்ட ஸ்தலமாக இருக்கலாம். இன்று அந்த இடத்திற்கு எந்த ஆராய்ச்சியாளரும் செல்லாதபடி, சுற்றி வர வேலியிடப்பட்டுள்ளது. (சவூதி) அரேபிய மக்கள் ஒரு காலத்தில் கிறிஸ்தவர்களாக இருந்த உண்மையை, இன்றைய ஆட்சியாளர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அவர்களைப் பொறுத்த வரை, அரேபிய மக்கள் பல தெய்வ வழிபாட்டில் இருந்து விலகி இஸ்லாமைத் தழுவியவர்கள். மெக்காவிலும், வேறு பல அரேபிய பிரதேசங்களிலும் பல தெய்வ வழிபாடு நிலவியது உண்மை தான். இருப்பினும் அயல் நாடுகளில் கிறிஸ்தவர்கள் வாழ்ந்ததற்கான சரித்திர சான்றுகள் உள்ளன. இன்றைய சிரியா, ஜோர்டான், யேமன், ஓமான் நாட்டு மக்களின் முன்னோர்கள் கிறிஸ்தவர்களாக இருந்தவர்கள்.
அந்த நாடுகளின் மக்கள் ஏதோ ஒரு வகை அரபு மொழியை பேசியவர்கள். அதை வட்டார வழக்கு மொழி எனலாம், அல்லது அரபு போலத் தோன்றும் இன்னொரு மொழி எனலாம். இறைதூதர் முகமது நபிகள் தலைமை தாங்கிய இஸ்லாமியப் படைகளின் வெற்றிக்கு அந்த மக்களின் ஒத்துழைப்பு கிடைத்தது. இதற்கு மொழி ஒற்றுமை ஒரு காரணியாக இருந்திருக்கலாம். அதுவே பின்னர் அந்தப் பிரதேச மக்கள் அனைவரும் இஸ்லாமியராக மாற ஊக்குவித்திருக்கலாம். ஒரு முக்கிய காரணம் மட்டும் இஸ்லாமியரின் வரலாற்று நூலில் பதியப் பட்டுள்ளது. முஸ்லிம்கள் அல்லாதோர் அதிக வரி செலுத்த வேண்டியிருந்தது. இந்த வரிச் சுமை காரணமாகவே பலர் இஸ்லாமிய மதத்தை தழுவிக் கொண்டனர். அந்த வரி அறவிடும் முறை இன்றும் மலேசியாவில் பின்பற்றப் படுகின்றது. மலேசியாவில் கிறிஸ்தவர்களும், இந்துக்களும், பௌத்தர்களும் பிரத்தியேக வரி கட்டிக் கொண்டிருக்கிறார்கள். பிற மதத்தவர் கட்டும் வரியைக் கொண்டு, ஏழை மலே முஸ்லிம்களிற்கு சலுகை செய்து கொடுக்கப்படுகின்றது.
பண்டைக் கால அரபு இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் மீது அதிக வரி செலுத்திய போதிலும், அவர்களை கட்டாயமாக மதமாற்றம் செய்யவில்லை. கிறிஸ்தவர்கள் தமது மத வழிபாட்டை இடையூறின்றி தொடர முடிந்தது. அதனால் தான் இன்றைக்கும் ஈராக், லெபனான், எகிப்து ஆகிய நாடுகளில் கணிசமான அளவு கிறிஸ்தவர்கள் வாழ்கின்றனர். அந்த நாடுகளைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் அனைவருக்கும் அரபு தான் தாய்மொழி. அவர்கள் தாம் கடவுளாக வணங்கும் இயேசுவை எப்படி அழைப்பார்கள்? "அல்லாஹ்" என்றழைக்காமல் வேறு எப்படி அழைப்பது? இத்தாலிக்கு தெற்கே இருக்கும் சிறிய தீவு, மால்ட்டா. அந்த தேசத்து மக்கள் மால்ட்டீஸ் மொழி பேசும் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள். அவர்கள் தமது பாஷையில் கடவுளை "அல்லா" என்று அழைக்கிறார்கள்.அதற்கு காரணம், மால்ட்டா தேச மக்களின் மூதாதையர், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் அரபு நாடுகளில் இருந்து வந்து குடியேறியவர்கள். மால்ட்டீஸ் மொழி கிட்டத்தட்ட அரபு மொழி போன்றிருக்கும்.
மலேசியாவில் இன்று அல்லாஹ் என்ற வார்த்தையை வைத்து எழுந்துள்ள சச்சரவு மொழி சார்ந்ததல்ல. அது இனப் பிரச்சினையின் இன்னொரு பரிமாணம். மலேசியாவில் 60 வீதமான மக்கள் மலே மொழி பேசுவோர். (முஸ்லிம்கள்) ஆட்சி அதிகாரம் அவர்கள் கைகளில் தான் உள்ளது. மீதி 40 வீதமான மக்கள், சீனர்கள், இந்தியர்கள், மற்றும் பழங்குடியினர். அவர்களில் பௌத்த, இந்து, கிறிஸ்தவ மதங்களை பின்பற்றுவோர் அதிகம். இந்த விகிதாசாரப் பிரதிநிதித்துவம் மலேசிய அரசை கலங்க வைத்துக் கொண்டிருக்கிறது. அரசுப் பணிகளில் இருந்து புறக்கணிக்கப்படும் சீனர்களும், இந்தியர்களும் தனியார் துறையில் கோலோச்சுகின்றனர். மலேசியா கடந்த காலங்களில் இந்தியர்களுக்கும், சீனர்களுக்கும் எதிரான கலவரங்களை கண்டுள்ளது. இப்போது கிறிஸ்தவர்களுக்கு எதிரான மதம் சார்ந்த கலவரம். என்ன விலை கொடுத்தேனும், மலேசிய அரசு இஸ்லாமிய-மலே பேரினவாதத்தை பாதுகாக்கத் துடிக்கின்றது. (பிரிட்டிஷ் காலத்தில்) வந்தேறுகுடிகளான சீனர்களையும், இந்தியர்களையும் ஒதுக்க நினைத்தாலும், கூடி வாழ வேண்டிய கசப்பான நிலைமை. பின்-காலனித்துவ மலேசியா அரசியல், தவிர்க்கவியலாது மதம், மொழி, இனம் சார்ந்த கலவையாகி விட்டது. இந்த அரசியல் சித்து விளையாட்டுக்குள் "அல்லாஹ்" படும் பாடு, பார்க்க சகிக்கவில்லை. பாவம், அவரை விட்டு விடுங்கள்.
HS.
No comments:
Post a Comment