இதயம் காப்போம்
நிச்சயமாக நாம் மனிதனை மிக்க அழகான வடிவில் படைத்திருக் கின்றோம்.” (அல்குர்ஆன் 95:4)
படைப்புகளனைத்திலும் சிறந்த படைப்பாக அல்லாஹ்வால் படைக்கப்பட்டுள்ள மனிதன் சிந்திக்கும் ஆற்றல் வழங்கப்பட்டுள்ளான். இதுவே அவனின் சிறப்பாகும். ஏனெனில் தமது சிந்தனா சக்தி மூலம் படைத்தவனின் வல்லமையுணர்ந்து அவனுக்கு முற்றிலும் வழிபடுதலே அதனின் நோக்கமாகும்.
மனித உடலே ஒரு மாபெரும் விந்தையாகும். ஆகவே அதனை “மாபெரும் உலகம்” (ஆலமும் அக்பர்) என வர்ணிக்கப்படுகிறது. உலகில் நாம் காணும் அனைத்துப் படைப்புகளின் பிரநிதித்துவமும், மனித உடலில் காணப்படுவதே அதற்குக் காரணமாகும்.
மனித உடலினமைப்பும், அதன் உறுப்புகளின் இயக்கமும் பேரற்புத மாகும். களிமண்ணில் உருவாக்கப்பட்டுள்ள நமது உடலின் ஆராய்ச்சி, விந்தையின் சிகரத்திற்கே நம்மை இட்டுச் செல்லும்.
மனித உடலின் இயக்கத்தில் மிக முக்கியப்பங்கு பெறும் உறுப்பு இதயமாகும்.
வலிமை மிக்கத் தசைகளாலான இவ்வுறுப்பு சுருங்கி விரியும் தன்மை கொண்டது. மார்பின் இடதுபுறத்தில், நெஞ்செலும்புகளுக்கும், முதுகெலும்புகளுக்குமிடையில் அமைந்துள்ளது. இதன் எடை 200 கிராம் முதல் 350 கிராம் வரையிலாகும். (ஆண் 250 – 350 கிராம், பெண் 200 – 300 கிராம்).
முட்டை வடிவம் கொண்ட இதயம், அதன் அடிபாகத்தில் குறுகிய தாகக் காணப்படும். இதன் இயக்கத்தை இடது மார்பின் கீழ்ப்பகுதியில் தொட்டு உணர்ந்து கொள்ள முடியும்.
இதயத்தசை “மயோ கார்டியம்” என்ற கடினத்தசையாலானது. அதன் வெளிப்புறம் “பெரி கார்டியம்” என்ற மெல்லிய இரட்டைச் சவ்வுடைய திரவப் பையினால் போர்த்தப்பட்டு அருகிலுள்ள நுரையீரல்,மார்புச்சுவர் ஆகியவற்றில் உராயாமல் பாதுகாக்கப்படுகிறது. உட்புறம் “எண்டோ தீலியம்” என்ற மெல்லிய தசையால் போர்த்தப்பட்டு இரத்தத்துடன் தொடர்பு கொள்ளும் தன்மையுடையதாகும்.
இதயம், இரு மேல் அறைகளும், இரு கீழ் அறைகளும் கொண்ட தாகும். மேல், கீழ் அறைகளுக்கிடையே “வால்வு” எனப்படும் தடுக் கிதழ்கள் அமைந்துள்ளன. இவைகள் இரத்தம் கீழறையிலிருந்து பின்னோக்கி மேலறைக்குப் பாய்ந்து விடாமல் தடுக்கின்றன. உடலின் அசுத்த இரத்தம் வலது மேலறைக்கு குழாய்கள் மூலம் கொண்டு வரப் பட்டு, அங்கிருந்து வலது கீழறைக்குள் பாய்ந்து, அங்கிருந்து, நுரையீரலுக்குக் கொண்டு செல்லப்பட்டு, கரியமில வாயு நீக்கப்பட்டு, பிராணவாயு நிரப்பப்பட்டு, அங்கிருந்து இதயத்தின் இடது மேலறைக்கு வந்தடைகிறது. பிறகு, இடது கீழறைக்குள் செலுத்தப்பட்டு, அங்கிருந்து இந்த சுத்த இரத்தம் உடல் முழுவதும் பாய்ச்சப்படுகிறது. இதுவே இதய இயக்கம். கருப்பையில் தொடங்கி, இறக்கும் வரை நீடிக்கிறது. தினமும் ஓர் இலட்சம் தடவைகள் சுருங்கி விரிகின்றன. 70 வருடம் உயிர் வாழும் மனிதனின் இதயம் 250 கோடி முறை சுருங்கி விரிந்திருக்கும். இதனால் உற்பத்தியாகும் சக்தி, ஒரு போர்க்கப்பலை 14 அடி உயரம் மேலே உயர்த்த முடியும். இடது கீழறை சுருங்கும் நேரம் 3/10 நொடி, விரியும் நேரம் ½ நொடி.
இரத்த ஓட்டம் உடலில் பாய்ந்து செல்லும் தூரம் 1,12000 கி.மீ. இரத்த சிவப்பணு ஒரு சதுர மில்லி மீட்டர் அளவில் 50 லட்சம் வெண்ணிற அணு 6000 முதல் 11,000 வரையிலாகும். சிவப்பணுவின் நடுவில் ஹீமோகுளோபின் என்ற இரும்புச் பொருள் பொதிந்திருக்கும். இதுவே பிராணவாயுவை ஏந்திச் சென்று உடல் திசுக்களுக்கு வழங்குகின்றது. சிவப்பணு 120 நாட்கள் இயங்கும். ஒரு நொடி நேரத்தில் 12 லட்சம் சிவப்பணுக்கள் மடிந்து அதே எண்ணிக்கையில் புதிய அணுக்கள் தோன்றும். ஒவ்வொரு சிவப்பணுவும் 75,000 தடவைகள் உடலைச் சுற்றிப் பயணம் செய்திருக்கும்.
வெள்ளையணுக்கள், நோய் கிருமிகளிலிருந்து உடலைப் பாதுகாக் கின்றன. மனித உடலில் 60 முதல் 90 வினாடி கால அளவில் இதயத் திலிருந்து இரத்தம் வெளியேறி, மீண்டும் வந்தடைகிறது.
உடல முழுவதும் இரத்தம் பாய்ந்து செல்ல தேவையான அளவு இரத்த அழுத்தம் நிலை பெற்றிருக்க வேண்டும். சரியான அளவு 120/80 மில்லி மீட்டர் பாதரசம் ஆகும். 140/90 க்கு மேல் அழுத்தம் அதிகரித்தால், உயர் இரத்த அழுத்தம் எனக் குறிப்பிடப்படுகிறது. இது கட்டுப்படுத்தப்படவில்லை என்றால் பல நோய்கள் தோன்ற ஏதுவாகும். இதயம் சுருங்கி விரிவதே, நாடித்துடிப்பாக மணிக்கட்டில் உணரப் படுகிறது. இது நிமிடத்திற்கு 60 முதல் 90 வரையிலாகும்.
இதய நோய்கள் :
1. பிறவிலேயே காணப்படும் இதயக் கோளாறுகள்.
2. உயர் இரத்த அழுத்தம்.
3. மாரடைப்பு
உயிருடன் பிறக்கும் 1000 குழந்தைகளில் 9 குழந்தைகளிடம் இதயக்கோளாறுகள் காணப்படுகின்றன. இக்குழந்தைகள் வளர்ந்து இயல்பான வாழ்க்கை வாழ முடியும். உரிய மருத்துவ ஆலோசனைகளைப் பெற்று தகுந்த சிகிச்சைகளை மேற்கொள்ளலாம்.
உயர் இரத்த அழுத்தம் :
சுத்த இரத்த நாளங்களின் மீது இதய இயக்கத்தின் வேகம் பதிக்கும் அழுத்தமே இரத்த அழுத்தம் என்பதாகும். இதனை நிர்வகிப்பதில் சிறுநீரகங்கள், சுப்ராரீனல் சுரப்பிகள், மூளை, நரம்பு மண்டலம் ஆகியன முக்கியப் பங்காற்றுகின்றன. சரியான அளவு 100/70 முதல் 140/90 மி.மீ. பாதரஸம் வரையிலாகும். 95 சதவிகித நோயாளிகளிடம் உயர் இரத்த அழுத்தத்திற்குரிய காரணங்கள் தெரிவதில்லை. பிற காரணங்கள், மரபுவழி, அதிக உடற்பருமன், புகைப் பிடித்தல், மது அருந்துதல், மன உளைச்சல், சர்க்கரை நோய், சிறுநீரக நோய்கள், நாளமில்லாச் சுரபி நோய்கள் முதலியன.
முதுமையில் இரத்த நாளங்கள் விறைத்து, விரியும் தன்மை குறைந்து விடுவதும், உயர் இரத்தம் தோன்றக் காரணமாகும். கொலஸ்ட்ரால் என்ற கொழுப்பு அளவு அதிகரித்து, இரத்த நாளங் களில் படிந்து விடுவதும் மற்றொரு காரணமாகும்.
விளைவுகள் :
இதயம் விரிந்து நலிவடைகிறது. சுவாசக் கோளாறு, மாரடைப்பு, மூளை இரத்த நாளம் வெடித்து, இரத்தம் சிதறி பக்கவாத நோய் தோன்றுதல் முக்கிய, உயிரைப் போக்கும் விளைவுகள். எனவே உணவுக் கட்டுப்பாடு, புகைப்பிடித்தல், மது அருந்துதல் ஆகியன தவிர்த்தல், உடற்பயிற்சி ஆகியனவும், உரிய மருந்துகளும், இரத்த அழுத்தம் சீராக அமைய உதவக் கூடியனவாகும்.
மாரடைப்பு :
இதயத் தசைக்கு இரத்தம் கொண்டு செல்லும் கொரனரி நாளங் களில் இரத்தம் ஓட்டம் தடைபடுவதால், இதய இயக்கம் பாதிக்கப் பட்டு மரணம் ஏற்படுகிறது. அதிகக் கொழுப்பு, இரத்த நாளத்தில் படிந்து நாளத்தை அடைத்துக் கொள்கிறது. புகைப்பிடித்தல் மற்றொரு முக்கியக் காரணமாகும். புகையிலையிலுள்ள நச்சுப் பொருட்கள் நாளத்தை தடிக்கச் செய்து விரியும் தன்மையை இழக்கச் செய்கின்றன. உயர் இரத்த அழுத்தம் சர்க்கரை நோய், உடல் பருமன், உடல் உழைப்பின்றி உட்கார்ந்து கழிக்கும் வாழ்க்கை முறை, மன உளைச்சல், எளிதில் உணர்ச்சி வசப்படுதல், அதிக கோபம் முதலியன மற்ற பிற மாரடைப்புக் காரணங்களாகும்.
நெஞ்சு வலி ஏற்படுதல், இது மார்பின் நடுவில் தோன்றி அங்கிருந்து பரவி, கழுத்து, தாடை, இரு கைகள் முழங்கை அல்லது மணிக்கட்டு வரை செல்லக்கூடும். இது முன்னெச்சரிக்கையின்றி தாக்கக்கூடும்.
மாரடைப்பு ஏற்பட்டால், உரிய மருந்துகள் மூலமும், நவீன அறுவை சிகிச்சை மூலமும் சிகிச்சை மேற்கொண்டு நலம் பெறலாம். எனினும் நோய்த் தடுப்பே சிறந்த வழியாகும். உணவுக் கட்டுப்பாடு (”உண்ணுங்கள், பருகுங்கள், மிதமிஞ்சி விடாதீர்கள்”). அல்குர்ஆன் (7:30) புகையிலை, மது தவிர்த்தல், உடற்பயிற்சி, இறை வணக்கம், தியானம், அமைதியான வாழ்க்கை முறை, நோய் ஏற்படின் உரிய மருத்துவம் முதலியன நோய் தடுப்புக்கு உதவக் கூடியனவாகும்.
உயரிய இஸ்லாமிய வாழ்க்கை முறை, சிறந்த நல வாழ்வுக்கு வழி காட்டுவதாகும். இதனைச் செயலாக்குவதன் மூலமே நீண்ட நல வாழ்வைப் பெற்றுக் கொள்ள முடியும் என்பதைக் கவனத்தில் வைப்போமாக !
“உடலில் ஒரு தசைத்துண்டு உள்ளது. அது சீராக இருந்தால், அனைத்து உறுப்புகளும் சீராக அமையும். அதுவே இதயம்” என பூமான் நபி (ஸல்) அவர்கள் புகன்றுள்ளனர். இந்நபிமொழியின் உட்கருத்து எதுவாக இருந்தாலும் இதயம் நலமாக இருப்பின், உடல் முழுவதும் நலமாகவே இருந்து விடும். எனவே இதயநலம் பேணுவது நீண்ட வாழ்வுக்கு வழியமைக்கும்.
நன்றி : குர் ஆனின் குரல் ( நவம்பர் 2009 )
1 comment:
பயனுள்ள தகவல்
வாழ்த்துக்கள்
http://azeezahmed.wordpress.com/
Post a Comment